₹ 50 ஆயிரம் கோடியில் சிறப்பு கடன் உதவி – ரிசர்வ் வங்கி ஆளுநர்
ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
அப்போது அவர் கூறுகையில், வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது; இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன.
கொரோனாவால் மிகப்பெரிய பொருளாதார சவால் காத்திருக்கிறது. நாட்டின் பொருளாதார நிலைமையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இணைய பயன்பாடு, ஆன்லைன் பரிவர்த்தனையில் எந்த பிரச்னையும் இல்லை. 476.5 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. மார்ச் மாதத்தில் வாகன உற்பத்தில் பல மடங்கு குறைந்துள்ளது.
பிப்-16 முதல் மார்ச் 27 வரை ஜி.டி.பி.யில் 3.2 சதவிகிதம் அளவுக்கு பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது, அடுத்த நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.4 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜி20 நாடுகளில் இது அதிகமாகும்.
கொரோனா தொற்றால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உணவு தானியங்களாக அரிசி, கோதுமை கையிருப்பு உள்ளது. பணப்புழக்கத்தை அதிகரிக்க, நிதிச்சுமையை குறைக்க பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும்.ரூ.50 ஆயிரம் கோடிக்கு வங்கிகளிடம் இருந்து கடன் பத்திரங்கள் பெறப்படும். நபர்டு, சிட்பி உள்ளிட்ட வங்கிகளின் மூலமாக ரூ. 50 ஆயிரம் கோடிக்கு கடன் உதவி வழங்க வழி செய்யப்படும்.