EBM News Tamil
Leading News Portal in Tamil

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 1,049 புள்ளிகள் சரிவு | fall in stock market: Sensex falls 1,049 points


மும்பை: சர்வதேச போக்குகள் உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. சென்செக்ஸ் 1,049 புள்ளிகள் சரிந்தன. இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் (ஜன.3) சரிந்தன. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 1,049 புள்ளிகள் (-1.36%) சரிந்து 76,330-ல் நிலை கொண்டிருந்தது. இதனிடையே, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 345 புள்ளிகள் (-1.47%) சரிந்து 23,085-ல் நிலை கொண்டிருந்தது. பெரும்பாலான நிறுவன பங்குகளும் வீழ்ச்சி கண்டிருந்தன. குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறை 6.5% சரிந்தது. டிரென்ட், பாரத் பெட்ரோலியம், அதானி போர்ட்ஸ் பங்குகள் அதிக சரிவை சந்தித்தன. நடுத்தர மற்றும் சிறிய நிறுவன குறியீட்டெண் 4 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. இந்த சரிவால் முதலீட்டாளருக்கு ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததும், அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்றதும், சர்வதேச சந்தைகளின் பாதக நிலையின் எதிரொலி உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவியதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 58 பைசா சரிந்து 86.62 ஆனதும் முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.