கோவை விமான நிலையத்தில் இருந்து இரு நாட்களில் 2 டன் கரும்பு ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி | 2 tonnes of sugarcane exported to Sharjah in coimbatore
கோவை: பொங்கல் பண்டிகைக்காக கோவை விமான நிலையத்தில் இருந்து, கடந்த 2 நாட்களில் 2 டன் கரும்பு ஷார்ஜாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. குறிப்பாக கோவை-ஷார்ஜா இடையே வாரத்தில் ஐந்து நாட்கள் சேவை வழங்கப்படுகிறது. வழக்கமாக இந்த விமானத்தில் ஒவ்வொரு முறையும் 3 டன் வரை சரக்குகள் கையாளப்படுவது வழக்கம்.
காய்கறிகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் ‘புக்கிங்’ செய்யப்படும். நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஷார்ஜா செல்லும் விமானத்தில் கரும்பு கொண்டு செல்ல கடந்த சில நாட்களாக ‘புக்கிங்’ பணிகள் மும்முரமாக நடைபெற்றன. கடந்த 2 நாட்களில் 2 டன் கரும்பு ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: திருச்சி போன்ற விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக விமான சேவை வழங்கப்படுகிறது. எனவே அங்கு பொருட்கள் விவரங்களை தனித்தனியாகப் பிரித்து, மொத்தம் கையாளப்பட்ட விவரத்தை எளிதில் தெரிந்து கொள்ளலாம். கோவை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு தினமும் விமான சேவை வழங்கப்படும் போதும் ஒவ்வொரு முறையும் ஒரு டன் வீதம் மட்டுமே சரக்கு கையாளப்படுகிறது. அபுதாபிக்கு இயக்கப்படும் விமானத்திலும் பெரியளவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுவதில்லை.
ஷார்ஜா செல்லும் விமானத்தில் மற்ற பல வகையான பொருட்கள் இணைந்து அனுப்பி வைக்கப்படுகின்றன. பொங்கலையொட்டி, கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கோவை விமான நிலையத்தில் மதுரை, திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 2 டன்கரும்பு ‘புக்கிங்’ செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: கோவை விமான நிலையத்தில் தினமும் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டமும் அதிகரித்துள்ளது. ஜனவரி 9-ம் தேதி மட்டும் உள்நாட்டுப் பிரிவில் 9,893 பேர் மற்றும் வெளிநாட்டுப் பிரிவில் 1,279 பேர் என மொத்தம் 11,172 பேர் பயணித்துள்ளனர். அன்றைய தினம் 33 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.