காலா நன்றாகப் போகிறது – ரஜினி மகிழ்ச்சி
ரஜினிகாந்த் நடித்த காலா படம் கடந்த வாரம் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. கர்நாடகாவில் மட்டும் மறுநாளிலிருந்து முழுமையாக வெளியானது. படத்திற்கு இருவேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்தன. இருப்பினும் படம் ரஜினிகாந்தின் முந்தைய படமான கபாலி படத்தை விட வசூலில் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.
சென்னையில் மட்டும் படம் நன்றாக வசூலிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கிலும், ஹிந்தியிலும் படம் தோல்வியடைந்துவிட்டது. தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வசூலைப் பெறவில்லை என்பதே உண்மை என படத்தை வாங்கி வெளியிட்டவர்களும் தியேட்டர்காரர்களும் தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும், ரஜினிகாந்த், டார்ஜிலிங்கில் அளித்த பேட்டியில், கடவுளின் அருளால் தமிழ்நாடு, கர்நாடகா, வெளிநாடுகள் ஆகியவற்றில் காலா படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். புதிய படத்திற்காக டார்ஜினிலிங்கில் ஒரு மாதம் வரை தங்கியிருக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே, சென்னையைத் தவிர பல வெளியூர்களில் காலா வெளியான தியேட்டர்களில் படத்தை மாற்றிவிட்டார்கள் என்றும் தகவல் வந்து கொண்டிருக்கிறது.