EBM News Tamil
Leading News Portal in Tamil

நிரவ் மோடி, மெகுல் சோக்சி வங்கி மோசடி ஆவணங்கள் தீயில் கருகினவா?

வங்கி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன என்று மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.
வங்கி மோசடி வழக்கில் வைர வர்த்தகர்களான நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருந்தது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த மும்பை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள் கருகிவிட்டதாகவும், உண்மைகளை மறைக்கவே தீ வைக்கப்பட்டு ஆவண்களை அழித்து இருப்பதாகவும் செய்தி வெளியானது. இதை மத்திய அரசு மறுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், ”மும்பை சிந்தியா ஹவுசில் வைக்கப்பட்டு இருந்த நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி தொடர்பான வங்கி மோசடி ஆவணங்கள், அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் கருகிவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அதுபோல் எதுவும் நடக்கவில்லை. பாதுகாப்பாக உள்ளன. தடயங்களை அழிப்பதற்காக, உண்மைகளை மறைப்பதற்காக ஆவணங்களுக்கு தீ வைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் தவறானவை. அதே கட்டிடத்தில் உள்ள பல்வேறு அறைகளுக்கு ஏற்கனவே ஆவணங்கள் மாற்றப்பட்டு விட்டன. காணாமல் போகலாம் அல்லது சேதம் ஏற்படலாம் என்ற நோக்கத்தில் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ரூ. 13,400 கோடி மோசடி செய்த வகையில் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இவர்கள் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.