பொங்கல் பண்டிகையால் மதுரையில் காய்கறிகள் விலை உச்சம் | Vegetable prices high in Madurai due to Pongal festival
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டிற்கு கடந்த காலத்தில் 1,000 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்தநிலையில், இன்று வெறும் 400 டன் மட்டுமே விற்பனைக்கு வந்தது. பொங்கல் பண்டிகையால் காய்கறிகள் தேவை அதிகரிப்பால் விலை திடீரென்று உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் 16 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், 3 1/2 லட்சம் ஹேக்டரில் அளவில் காய்கறிகள் சாகுபடி நடக்கிறது. தேசிய அளவில் காய்கறி உற்பத்தியில் முன்னனியில் இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. ஆனால், தமிழகத்தில் காய்கறிகள் தேவை அதிகமாக இருப்பதால், முக்கிய காய்கறிகள் வரத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வடமாநிலங்களையே நம்ப வேண்டி உள்ளது. அம்மாநிலங்களில் இருந்து காய்கறிகள் உற்பத்தி குறைந்தாலோ, வரத்து குறைந்தாலே தமிழகத்தில் காய்கறிகள் விலை அதிகரிக்கும்.
மேலும், தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களிலும் காய்கறிகள் தேவை அதிகரித்து, அதன் விலை கூடும். இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் அனைத்து வகையான காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து சீராக காய்க்றிகள் வரத்து இருந்தாலும், பொங்கல் பண்டிகை, சபரிமலை சீசன் இரண்டும் சேர்ந்து கொண்டதால் காய்கறிகள் தேவை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கு தகுந்தார்போல் காய்கறிகள் வரத்து இல்லாததால் அதன் விலை தற்போது உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
மாட்டுத்தாவணி காய்கறிகள் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தலைவர் காசி மாயன் கூறுகையில், ‘‘வழக்கமாக மாட்டுத்தாவணிக்கு சமீப காலமாக ஒருநாளைக்கு 500 டன் காய்கறிகள் வந்து கொண்டிருந்தது. முக்கிய பண்டிகை நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 600 முதல் 700 வரும். ஆனால், கடந்த காலத்தில் தினசரி 1,000 டன் காய்கறிகள் மாட்டுத்தாவணி மார்க்கெட்டிற்கு வந்து கொண்டிருந்தது.
தற்போது மக்கள், பெரும் அன்றாடமே அசைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் காய்கறிகள் விற்பனை சதவீதம் குறைந்ததால் மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்தும் குறைந்தது. இன்று பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் கூட வெறும் 400 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. பற்றாக்குறையால் காய்கறிகள் விலை அதிகரித்தது. சமீபத்தில் பெய்த மழையால் சின்ன வெங்காயம் அழிந்ததால், அதன் வரத்து குறைந்து கிலோ ரூ.110 முதல் ரூ.120 விற்பனையாகிறது.
முருங்கைகாய் ரூ.100, அவரைக்காய் ரூ.100, பீன்ஸ் ரூ.100 விற்பனையாகிறது. கடந்த வாரம் ரூ.60க்கு விற்ற மொச்சை இன்று ரூ.100க்கு விலை உயர்ந்தது. பொங்கல் பண்டிகை நாட்களில் கிராமங்களில் மொச்சைக்காய் குழம்பு வைப்பது வழக்கும். மொச்சைக்காய்களை உரித்து ஊற வைத்து அதைபிதுக்கி குழம்பு வைப்பார்கள் தற்போது அதிகளவு மொச்சைக்காயை வாங்கி செல்கிறார்கள்.
கத்திரிக்காய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, மிளகாய் ரூ.40, சீவரக்காய் ரூ.40, கேரட் ரூ.80, பீட்ரூட் ரூ.60, சேனை ரூ.80, சேம்பு ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.60, முட்டைகோஸ் ரூ.40 ஆகிய விலைகளில் விற்கிறது. தக்காளி மட்டுமே தற்போது விலை குறைவாக இருக்கிறது. இன்று கிலோ ரூ.15 முதல் ரூ. 20 வரை விற்பனையானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதன் விலையும் நாளை முதல் விலை அதிகரிக்கும். சாம்பாருக்காக பீன்ஸ், முருங்கைக்காய் அதிகளவு பயன்படுத்துவதால் அதன் விலை உயர்ந்துள்ளது,’’ என்றார்.