ரூ.1,110… மதுரையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பே வாழைத் தார் விலை உயர்வு! | Banana tar prices increase in Madurai ahead of Pongal festival
மதுரை: பொங்கல் பண்டிகைக்கு முன்பே மதுரையில் வாழைத்தார்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று ரூ.600க்கு விற்ற ஒரு நாட்டு தார் ஒரே நாளில் விலை உயர்ந்து இன்று ரூ.1,110க்கு விற்பனையானது.
தென் மாவட்டங்களில் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் வாழைத்தார் உற்பத்தி அதிகளவு நடக்கிறது. இந்த மாவட்டங்களில் இருந்து அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களும், வாழை இலைகளும் கேரளாவுக்கும், தமிழகத்தில் உள்ள பல்வேறு வாழைத்தார் சந்தைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தென் தமிழகத்தில், மதுரை ஒபுளா படித்துறை, யானைக்கல், மேலூர், உசிலம்பட்டி, திருச்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், வத்தலகண்டு, திண்டுக்கல், பாவூர்சத்திரம், தென்காசி, திருநெல்வேலி பேட்டை போன்ற இடங்களில் முக்கிய வாழைத்தார் சந்தைகள் செயல்படுகின்றன. திருச்சியில் இருந்து அதிகளவு வாழைத்தார் கேரளாவுக்கு விற்பனைக்கு செல்கிறது.
தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி சீர்வரிசை செய்வது, கோயில் பூஜைகளுக்கு அதிகளவு வாழைத்தார் தேவைப்படுகிறது. ஆனால், அதற்கு தகுந்தவாறு வாழைத்தார் உற்பத்தியும், வரத்தும் இல்லை. அதனால், மதுரையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பே வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது. யானைக்கல் வாழைத்தார் மண்டி வியாபாரி ராஜ்குமார் கூறுகையில், “கடந்த வாரம் ரூ.200, ரூ.300க்கு விற்ற வாழைத்தார்கள் நேற்று ரூ. 600 விற்கப்பட்டது. நாட்டு வாழைத்தார் கடந்த வாரம் ரூ.600 விற்றது. இன்று ஒரே நாளில் ரூ.1150 விலை உயர்ந்தது,” என்றார்.