இந்தியாவில் மின்சார கார் விற்பனை 20% அதிகரிப்பு: முதலிடத்தில் டாடா மோட்டார்ஸ் | EV sales zoom 20 percent to nearly 1L units in 2024 on price cuts
இந்தியாவில் மின்சார கார்களின் விற்பனை கடந்த 2024-ல் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (எப்ஏடிஏ) தெரிவித்துள்ளதாவது: கடந்த 2024-ல் ஒரு லட்சம் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இது, முந்தைய 2023-ல் விற்பனையான 82,688 கார்களுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகமாகும். ஆண்டு இறுதியில் விலை குறைப்பு செய்யப்பட்டதே விற்பனை அதிகரிப்புக்கு முக்கிய காரணம்.
சார்ஜிங் உட்கட்டமைப்பு, பேட்டரி ஆயுள் காலம், மறுவிற்பனை மதிப்பு உள்ளிட்டவற்றில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருந்தபோதிலும் கடந்த ஆண்டில் ஒட்டுமொத்த எலக்ட்ரிக் வாகன விற்பனை 2.4 சதவீதம் அதிகரித்து 40.7 லட்சத்தை எட்டியது.
எலக்ட்ரிக் வாகன விற்பனையில் 61,496 வாகனங்களை விற்பனை செய்து டாடா மோட்டார்ஸ் எப்போதும்போல் முதலிடத்தில் உள்ளது. இது, கடந்த 2023-ல் 60,100 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இருப்பினும், டாடா மோட்டார்ஸ் பங்களிப்பு கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 73 சதவீதத்திலிருந்து 62 சதவீதமாக குறைந்துள்ளது.
ஹாரியர், சபாரி, சியாரா கார்களை உள்ளடக்கிய எஸ்யுவி பிரிவில் எலக்ட்ரிக் பதிப்பை வெளியிட டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் விற்பனை கடந்தாண்டில் 125 சதவீதம் அதிகரித்து 21,484-ஆக இருந்தது. முந்தைய 2023-ல் இந்நிறுவனத்தின் விற்பனை 9,526-ஆக காணப்பட்டது. இவ்வாறு எப்ஏடிஏ தெரிவித்துள்ளது.