மீண்டும் ரூ.58 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 அதிகரிப்பு | Gold price hits Rs 58000 again
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.56,880-க்கு விற்பனையானது. தங்கம் விலை மீண்டும் ரூ.58 ஆயிரத்தை எட்டியதால், நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்துக்கு விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது.
கடந்த டிச. 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,800-க்கு விற்பனையானது. பின்னர் படிப்படியாக அதிகரித்தது நேற்று முன்தினம் பவுன் ரூ.57,440-க்கு விற்பனையானது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்தது. இதன்படி, கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.7,260-க்கும், பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.58,080-க்கும் விற்பனையானது.
கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,180 அதிகரித்துள்ளது. தங்கம் விலை அதிகரித்து வருவதால் நகை வாங்குவோர் கவலை அடையத் தொடங்கியுள்ளனர். இதேபோல, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ரூ.63,360-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.100-க்கு விற்பனையானது. அதேபோல, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,00,000 ஆக இருந்தது.