EBM News Tamil
Leading News Portal in Tamil

கடந்த ஆண்டில் 268 ஐபிஓ-க்கள் வெளியீடு: ஆசிய அளவில் தேசிய பங்குச் சந்தை சாதனை! | National Stock Exchange sets record by issuing 268 IPOs last year


மும்பை: கடந்த ஆண்டில் வணிக நிறுவனங்கள் 268 ஐபிஓ-க்களை (புதிய பங்கு வெளியீடு) தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) மூலம் வெளியிட்டது. இது ஒரே ஆண்டில் ஆசியாவிலேயே வெளியிடப்பட்ட அதிக எண்ணிக்கையிலான ஐபிஓ-க்கள் ஆகும்.

இதன் மூலம் ரூ.1.67 லட்சம் கோடி நிதியை நிறுவனங்கள் திரட்டியுள்ளன. கடந்த 2024-ல் மட்டும் தேசிய பங்குச் சந்தையின் மெயின்போர்டில் 90 மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தரப்பில் 178 ஐபிஓ பட்டியலிடப்பட்டது. இந்திய பங்குச் சந்தை செயல்பாடு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதை இது சுட்டிக்காட்டுவதாக வணிக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் கடந்த ஆண்டு 1,145 ஐபிஓ வெளியிடப்பட்டது. 2023-ல் இந்த எண்ணிக்கை 1,271 என இருந்தது. சீனா (101), ஜப்பான் (93) மற்றும் ஹாங் காங் (66) நாட்டு நிறுவனங்கள் ஐபிஓ-க்களை வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் ஆரோக்கியமாக இருப்பதாலும் நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் ஆர்வம் காட்டுகின்றன என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் பங்குச் சந்தை முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி நாட்டில் 17.9 கோடி டிமேட் கணக்குகள் உள்ளன. இவற்றில் 3.5 கணக்குகள் இவ்வாண்டில் தொடங்கப்பட்டுள்ளன. சராசரியாக மாதத்துக்கு 35 லட்சம் டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.