கோவையில் வணிக வளாகங்களாக உருமாறும் திரையரங்குகள்! | theaters change into shopping malls in Coimbatore
கோவை: தொழில் நகரான கோவையில் திரைப்பட தொழில் வணிகம் கோலோச்சி வந்த நிலை மாறி கால ஓட்டத்தில் நூற்றாண்டு, பொன் விழா கண்ட திரையரங்குகள் அண்மைக் காலங்களில் வணிக வளாகங்களாக மாறி வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னையைத் தாண்டி சேலத்தில் 1935-ல் டி.ஆர்.சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவைத் தொடங்கினார்.
அதன் தொடர்ச்சியாக 1937-ல் ரங்கசாமி நாயுடு, ஆர்.கே.ராமகிருஷ்ணன் செட்டியார், இயக்குநர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோரின் முயற்சியில் கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோ தொடங்கப்பட்டது. தொடர்ந்து 1946-ல் புலியகுளத்தில் பட்சிராஜா ஸ்டுடியோ தொடங்கப்பட்டது. கருணாநிதி, எம்ஜிஆர் ஆகிய இருவரின் திரை வாழ்க்கையில் சென்ட்ரல் ஸ்டுடியோ, மாடர்ன் தியேட்டர்ஸ் ஆகியவை முக்கியப் பங்கு வகித்தன.
திரைப்படத் துறையில் முக்கியப் பங்களித்த கோவையில் தென்னிந்தி யாவிலேயே முதல் முறையாக 1914-ம் ஆண்டு டிலைட் திரையரங்கு கட்டப் பட்டது. சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் கட்டிய நூற்றாண்டை கடந்த டிலைட் திரையரங்கு அண்மையில் வணிக வளாகம் கட்ட இடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வடகோவை மேம்பாலம் அருகில் 1957-ல் ராமசாமி நாயக்கர் என்பவரால் சென்ட்ரல் திரையரங்கு தொடங்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் இங்கு அதிகளவில் திரையிடப்பட்டன.
சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சென்ட்ரல் மற்றும் கனகதாரா ஆகிய இரண்டு திரையரங்கு கள் கோவை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. சுமார் 1,500 பேர் வரை அமர்ந்து திரைப்படம் பார்க்கும் வசதி கொண்டதாக இருந்து வந்தது. முதல் முறையாக 70 எம்.எம். அகன்ற திரை வசதி, டி.டி.எஸ். மற்றும் டால்பி சவுண்ட் தொழில்நுட்பம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திரையரங்கு நிர்வாகக் காரணங்களுக்காக கரோனா தொற்று பரவலுக்கு முன்பாக மூடப்பட்டது. ரியல் எஸ்டேட் துறையில் கோவை நகரம் வளர்ந்துவரும் நிலையில் பெரு நிறுவனம் சார்பில் வணிக வளாகமாக மாற்றப்பட்டுவரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, எழுத்தாளர் சி.ஆர்.இளங்கோவன் கூறும்போது, “தொழில் நகரான கோவையில் திரைப்படத்தையும் தொழிலாகத்தான் பார்த்தனர். அந்தவகையில், திரைத்தொழிலாக சென்னைக்கு வெளியே கோவையில் 2 ஸ்டுடியோக்கள் கட்டமைப்பு செய்யப்பட்டன. தொழிலில் லாபம் தான் முக்கியம். லாபம் இல்லையெனில் அந்த தொழில் காணாமல் போகும். இதன்காரணமாக திரையரங்குகள் வணிக வளாகங்களாக மாறி வருகின்றன.
கோவையில் டிலைட், சாமி, ராஜா, ராயல், இருதயா, அருள், கவிதா, கீதாலயா என பல்வேறு திரையரங்குகள் இப்போது இல்லை. சில திரையரங்குகள் வணிக வளாகங்களாக மாறிவிட்டன. தற்போது சென்ட்ரல் திரையரங்கு வணிக வளாகமாக மாற உள்ளது. 1960, 70, 80-களில் இங்கு ஆங்கில படம் பார்க்க தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும்.
அந்த திரையரங்கில் ரசிகர்கள் கதையை அறிந்து கொள்ளும் வகையில் கரும்பலகையில் கதைச் சுருக்கம் தமிழில் எழுதப்பட்டிருக்கும். காலம் மாறும்போது எல்லாமும் மாறும். சினிமா வந்த போது நாடகம் காணாமல் போனது. மாற்றம் ஒன்றே மாறாதது” என்றார்.