அரசாங்கம் முதல் கடைக்கோடி மனிதன் வரை அனைவருக்கும் பொதுவான ஓர் அம்சம் – கடன். நெருக்கடி காலத்தில் பேருதவியாக இருக்கும் கடன், தீவிரமான பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து விடுவதாக புகார்கள் எழுகின்றன. இவற்றுக்கு ஓரளவு தீர்வு காணும் வகையில், சட்டவிரோதக் கடன்களை வரையறைக்குள் கொண்டு வரும் விதமாக, மத்திய அரசு தற்போது, ‘வரையறுக்கப்படாத கடன் தடை மசோதா’ ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, ‘கடன்’ – தனிப்பட்ட முறையில் ஓர் அவமானமாக, ஒருவரின் இயலாமையைக் குறிப்பதாக இருந்தது. ஆனால், ‘நவீனப் பொருளாதாரம்’, கடன் குறித்த புதிய சிந்தனையை, புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தி, ஆழமாக வேரூன்ற வைத்து விட்டது.
நுகர்வுக் கலாசாரம் பெருகியது; ‘தேவைச் சந்தை’ உருவானது. அத்தியாவசியம் என்று தனியே எதுவும் இல்லாமற் போனது. இதற்கு ஏற்றாற் போல, புதிது புதிதாக கடன் திட்டங்களுடன் மக்களை நோக்கிப் புயலாய் வந்து தாக்கின – தனியார் நிதி நிறுவனங்கள்.
‘சரியாகத் திட்டமிட்டு செலவிட்டால், கடன் தொகை நல்லதுதான் செய்யும்’ என்று, கடன் வாங்குவதற்கு நியாயம் கற்பிக்கும் ‘பொருளாதாரத் தத்துவங்கள்’, நெருங்கிய உள்ளார்ந்த ஆபத்துகளை மறைத்து, தொலைதூர ஆதாயங்களைப் பெரிதுபடுத்திக் காட்டின. விளைவு..? அரசுகளும் மக்களும் கடனாய் வாங்கித் தள்ளுகிறார்கள். சமீபத்தில் நமது அண்டை நாடு ஒன்றில், உலக வங்கிக் கடன் கிடைத்து விட்டதை, மக்கள் தெருவில் இறங்கி உற்சாகமாகக் கொண்டாடினார்கள்.
கடன் – புதைமணல் போன்றது. மெல்ல மெல்ல உள்ளே இழுத்து, இறுதியில் மூழ்கடித்து விடும். கடன் சுமை, வலிமையற்ற தனிநபர்களைப் பேராபத்தில் தள்ளி விடுகிறது. ‘முறைசாரா’ நிதி உதவிகள், சாமானியர்களின் அவசரத் தேவையைச் சாதகமாக்கிக் கொண்டு, அவர்களை முழுவதுமாக சுரண்டி, அவர்களின் கழுத்தை நெரிக்கின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்கள் அன்றியும், ஆங்காங்கே செல்வாக்குமிக்க தனி நபர்கள் சிலர் நடத்தும் ‘பண வணிகம்’ – மனித உரிமைகளுக்கு எதிரானது; சற்றும் மனிதாபிமானம் அற்றது. ஆனாலும் பெருநகரம் முதல் சிறு கிராமங்கள் வரை, ‘வட்டிக்குப் பணம்’ – சமாளிக்க முடியாத சமூகக் கொடுமையாக வளர்ந்து நிற்கிறது. இதற்கு எதிராக இதுவரை பாதிக்கப்பட்ட நபர்கள்தான் தனிப்பட்ட முறையில் போராட வேண்டி இருந்தது. இப்போது அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க, கடன் தடை மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, 13/12/2024 தேதியிட்ட (எஃப்.எண். 7/93/2024) கடிதத்தை, மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழுள்ள நிதிச் சேவைத் துறை, மாநிலத் தலைமைச் செயலாளர்கள், வங்கிகளின் கூட்டமைப்பு, பங்குச் சந்தை வாரியம் உள்ளிட்ட பலருக்கும் அனுப்பி, அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுள்ளது. ‘அங்கீகரிக்கப்படாத நிதிச் செயல்பாடுகளைத் தடுத்து, நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதே இம்மசோதாவின் நோக்கம்’ என்று இந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.
அநியாய வட்டி, கடனைத் திரும்பப் பெறுவதில் சட்டவிரோத மிரட்டல், கடன் மூலம் ஏழை நுகர் வோரின் சொத்துகளைப் பறித்துக் கொள்வது, கடனைத் திருப்பிச் செலுத்த இயலாதவர்களை தற்கொலைக்குத் தூண்டும் வகையில் அவமதித்தல் என்று, கொடுஞ்செயல்கள் நீண்டு கொண்டே போகின்றன. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டி ஒரு ஆரோக்கியமான தீர்வுக்கு வழி காட்ட முயல்கிறது இந்த மசோதா. பொது மக்களுக்கு நேரடியாக நல்ல பலன், உடனடி நிவாரணம் வழங்கும் என்கிற நம்பிக்கையை இந்த மசோதா உறுதியாக ஏற்படுத்துகிறது.
இம்மசோதாவின் பிரிவு 3-ன் மூலம், டிஜிட்டல் கடன் வசதி உட்பட, அங்கீகரிக்கப்படாத நிதி நடவடிக்கைகள் தடை செய்யப்படுகின்றன. நிதி வழங்குவோர் நேரடியாகவோ மறைமுகமாகவோ வரையறுக்கப்படாத கடன் நடவடிக்கை குறித்து விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. பிரிவு 4-ன்படி, நிதிக் கடன் குறித்து தவறாக வழி நடத்துவதும், இந்த நோக்கத்துடன் பொதுமக்களைத் தூண்டுவதும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
இந்த மசோதாவின் பிரிவு 6 (3)-ன் கீழ், ‘தவறான நடவடிக்கை’ என்று நம்புவதற்குக் காரணம் இருந்தால், துறை அலுவலர், அதனை எழுத்து மூலம் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். குற்றம் இழைத்தவரின் கணக்குகள் / சொத்துகளைத் தற்காலிகமாக முடக்கலாம்; பறிமுதல் செய்யலாம்.
நிதி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், பிரிவு 10-ன் கீழ், முறையாக அரசுக்கு தகவல் தந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு தமது வணிக நடவடிக்கைகளைத் தொடரலாம். ஏதேனும், ‘வரையறுக்கப்படாத’ நிதி நடவடிக்கை நடைபெறுவதாக ஐயம் எழுந்தால், வங்கிகள் இதுகுறித்து அரசுக்குத் தகவல் தரலாம். இந்தத் தகவல், வருமான வரித் துறை, மத்திய புலனாய்வுத் துறை மற்றும் மாநிலக் காவல் துறையுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளாதவர்கள், அதாவது ‘வரையறுக்கப்படாத’ நிதி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், குற்றத்தின் தன்மையைப் பொருத்து, பிரிவு 17-ன் படி, 2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு உள்ளாவார்கள்; ரூ.2 லட்சம் முதல், ரூ.50 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
மசோதாவின் பிரிவு 20 – தேவை என்று கருதினால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் இடங்களை, ‘வாரண்ட்’ இல்லாமல் சோதனையிட, காவல் துறைக்கு அதிகாரம் வழங்குகிறது. இப்போதைக்கு இது, ஒரு மசோதாவாக மட்டுமே உள்ளது. (தேவைப்பட்டால்) தக்க மாற்றங்களுடன், சட்டம் நிறைவேற்றப்படும். இதன் மூலம், சாமானியக் குடிமகனுக்கு, தீராத கடன் கொடுமைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இந்த சட்டம் மட்டும் போதுமா..? அவசரத்துக்கு கடன் உதவி வழங்க, சிறப்புத் திட்டம் ஏதும் வேண்டாமா..? ‘இருக்கிற’ கடன் வசதிக்கான வழிகளை அடைத்து விட்டால்… பெரும் சிக்கலாக மாறி விடாதா..?
நியாயமான கேள்வி. பொறுப்பில் உள்ளவர்களின் கவனத்துக்கு வைக்கிறோம். இன்றோ நாளையோ மறுநாளோ.. நல்ல தீர்வு கிடைக்காமலா போகும்.?