குடும்பத்துடன் 8 மணி நேரம் செலவிட்டால் உங்கள் மனைவி வீட்டை விட்டே ஓடிவிடுவார்: கவுதம் அதானி நகைச்சுவை கருத்து | If you spend 8 hours with family your wife will run away says Gautam Adani
புதுடெல்லி: குடும்பத்தினருடன் நீங்கள் 8 மணி நேரத்தை செலவிட்டால் உங்களது மனைவி வீட்டை விட்டே ஓடிவிடுவார் என வேலை-வாழ்க்கை சமநிலை குறித்தான கேள்விக்கு அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது: வேலை மற்றும் வாழ்கை சமநிலை பற்றிய உங்களது யோசனையை என்னிடம் திணிக்க கூடாது. அதேபோன்று, என்னுடைய யோசனை உங்கள் மீது திணிக்கப்பட கூடாது. சிலருக்கு குடும்பத்துடன் 4 மணி நேரம் செலவிட்டாலே அவர்களுக்கு தேவையான மகிழ்ச்சி கிடைத்துவிடும். இன்னும் சிலருக்கு 8 மணி நேரம் குடும்பத்துடன் இருந்தால்தான் முழு திருப்தி கிடைக்கும். இதுதான் அவரவர் உடைய வேலை-வாழ்க்கை சமநிலை. இருப்பினும், 8 மணி நேரம் நீங்கள் குடும்பத்துடன் இருந்தால் உங்களது மனைவி வீட்டை விட்டே ஓடிவிடுவார்.
நாம் விரும்பும் விஷயங்களை செய்யும்போது நம்முடைய வேலையும் வாழ்க்கையும் சமநிலையில் இருக்கும். நமக்கு குடும்பம், வேலையை தவிர வேறு உலகம் இல்லை. தனிப்பட்ட குணம் மற்றும் பணிவுதான் மனிதருக்கான மிக முக்கியமான விஷயங்கள். மற்றவையெல்லாம் என்னைப் பொருத்தவரை செல்வம் உட்பட அனைத்துமே செயற்கையானவை. நீங்கள் சாப்பிடுவதைத்தான் நானும் சாப்பிடுகிறேன். யாருக்கும் இந்த உலகம் நிரந்தரம் கிடையாது. இதைப் புரிந்து கொண்டாலே வாழ்க்கை என்பது எளிதாகிவிடும். இவ்வாறு அதானி கூறியுள்ளார்.