இந்திய பாதுகாப்பு துறை ஏற்றுமதி ரூ.21,000 கோடியை தாண்டி சாதனை: ராஜ்நாத் சிங் தகவல் | Indian defense exports cross Rs 21000 crore mark
இந்தியா பாதுகாப்பு துறையின் ஏற்றுமதி ரூ.21,000 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இரு நூற்றாண்டு பழமையான மோவ் கன்டோன்மெண்ட் ராணுவ போர் கல்லூரியில் (ஏடபிள்யுசி) அதிகாரிகள் இடையே அவர் நேற்று பேசியதாவது: நமது பாதுகாப்பு துறையின் ஏற்றுமதி பத்தாண்டுகளுக்கு முன்பு ரூ.2,000 கோடி என்ற அளவில் இருந்தது. இது. தற்போது ரூ.21,000 கோடியை கடந்துள்ளது. வரும் 2029-ம் ஆண்டுக்குள் ரூ.50,000 கோடி ஏற்றுமதியை தொட்டுவிட வேண்டும் என்பதே நமது இலக்கு.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் மற்ற நாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுதி செய்யப்படுகின்றன. தகவல் போர், செயற்கை நுண்ணறிவு சார்ந்த போர், ப்ராக்ஸி போர், மின்காந்த போர், விண்வெளி போர், இணைய தாக்குதல் என வழக்கத்துக்கு மாறாக தற்போதைய போர் முறைகள் மாறியுள்ளன. இவை நமக்கு பெரும் சவாலாக உள்ளன. இத்தகைய தாக்குதல்களை எதிர்த்து போராடுவதற்கு ராணுவம் நன்கு பயிற்சி பெற்றதாகவும், நவீன ஆயுதம் ஏந்தியதாகவும் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்த பயிற்சி கல்லூரி மதிப்புமிக்க பங்களி்ப்பை இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறது.
மாறிவரும் காலத்துக்கு ஏற்ப பயிற்சி மையங்கள் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு, போராடும் பணியாளர்களை ஒவ்வொரு விதமான சவாலுக்கும் ஏற்றவர்களாக மாற்றுவதற்கு அரும்பாடுபட்டு வருவது பாராட்டத்தக்கது. முப்படைகளின் சேவையில் ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுறவை ஏற்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்