இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் விற்பனை தொடக்கம்: வரிசைகட்டி நிற்கும் ஆப்பிள் ஆர்வலர்கள் | iPhone 16 Series sales in India Apple Enthusiasts throng queue
மும்பை: ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதலே மும்பை மற்றும் டெல்லியில் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவன ஆப்பிள் ஸ்டோரில் ஆப்பிள் சாதன ஆர்வலர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தங்களின் ஆப்பிள் ஸ்டோர்’களை திறந்தது குறிப்பிடத்தக்கது. ஐபோன் 16, ஐபோன் 16+, ஐபோன் 16 புரோ மற்றும் ஐபோன் 16 புரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை ஐபோன் 16 சீரிஸில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதன் முன்பதிவு தொடங்கியது.
மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோரில் 21 மணி நேரம் காத்திருந்து புதிய ஐபோனை வாங்கிய உஜ்வால் ஷா தெரிவித்தது, “நான் நேற்று காலை 11 மணிக்கு இங்கு வந்தேன். முதல் நபராக நான் தான் மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு இன்று காலை 8 மணிக்கு சென்ற முதல் நபர். இந்த நாள் எனக்கு உற்சாகமாக தொடங்கி உள்ளது. மும்பையில் இந்த போனை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு நான் வரிசையில் 17 மணி நேரம் காத்திருந்தேன்”.
வரிசையில் காத்திருந்த ஆப்பிள் சாதன ஆர்வலர்களுக்கு இந்திய ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வரவேற்றனர். “நான் காலை 6 மணிக்கு வந்தேன். ஐபோன் 16 புரோ மேக்ஸ் போன் வாங்கி உள்ளேன். எனக்கு ஐஓஎஸ் 18 இயங்குதளம் பிடித்துள்ளது. கேமராவில் ஸூம் செய்யும் அம்சம் உள்ளது. இதற்காக நான் சூரத்தில் இருந்து மும்பை வந்தேன்” என அக்ஷய் தெரிவித்தார். >>ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் போன்கள்: விலை, சிறப்பு அம்சங்கள்