சதுரங்கப்பட்டினம் மீனவர்கள் வலையில் சிக்கிய 10 டன் கவலை மீன்கள்! | Chaturanga Pattinam Fishermen 10 Tonnes of Chalai Fish Trapped on Nets: Fishermen Happy
கல்பாக்கம்: சதுரங்கப்பட்டினத்தில் இன்று கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் சுமார் 10 டன்னுக்கும் மேற்பட்ட கவலை மீன்கள் பிடிபட்டதால், மீனவர்கள் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பகுதியில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 நாட்டு படகுகளில் இன்று அதிகாலை மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். கடலில் அவர்கள் விரித்த வலையில் கவலை மீன்கள் சுமார் 10 டன்னுக்கும் மேலாக பிடிபட்டன. இவற்றை பத்திரமாக படகுகள் மூலம் மாலையில் கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள், ஒரு பாக்ஸ் சுமார் ரூ.700 என்ற விலையில் மொத்தமாக ஏற்றுமதி செய்தனர்.
மேலும், கவலை மீன்கள் மொத்தமாக பிடிபட்டதன் மூலம் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இது தவிர, கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும். அதனால், கவலை மீன்கள் அதிகளவில் கிடைத்துள்ளதாகவும். தற்போது ஏற்பட்டுள்ள கடல் நீரோட்ட மாறுபாடு காரணமாக ஒரு சில நாட்களுக்கு வேறு மீன்கள் கிடைப்பது மிகவும் அரிதான செயல் எனவும் தெரிவித்தனர்.