EBM News Tamil
Leading News Portal in Tamil

மோடி 3.0 | உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் அதிகரிப்பு! | Modi third term Stock market peak Sensex Nifty high


மும்பை: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமைந்துள்ளது இந்திய பங்குச் சந்தையில் எதிரொலித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) காலை வர்த்தகம் தொடங்கியது முதல் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் நிலையான ஏற்றத்தை கண்டுள்ளது. சென்செக்ஸ் 76,935 புள்ளிகள், நிஃப்டி 23,319 புள்ளிகள் என தொடங்கியது.

அதிகபட்சமாக 77,079.04 என்ற புள்ளிகளை சென்செக்ஸ் இன்று எட்டியிருந்தது. நிஃப்டியும் 23,411.90 என்ற புள்ளிகளை எட்டியிருந்தது. இதனால் பெரும்பாலான துறைகளின் வர்த்தகம் ஏற்றத்துடன் உள்ளது.

புதிய அரசின் கொள்கை முடிவுகள், மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் இலாகா போன்ற விவகாரங்களில் முதலீட்டாளர்களின் கவனம் இப்போது இருப்பதாக வணிக துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இதனை பொறுத்தே ட்ரெண்ட் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் மீண்டும் மோடி ஆட்சி அமைக்கிறார் என தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. அதனால் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 3) பங்குச் சந்தை வர்த்தகம் உச்சத்தை எட்டியது. தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ம் தேதியன்று பங்குச்சந்தை வீழ்ச்சியை எதிர்கொண்டது. பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது என்ற தகவல் வெளியானதும் வர்த்தக நிலை சீரானது குறிப்பிடத்தக்கது.