EBM News Tamil
Leading News Portal in Tamil

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு: கிலோ ரூ.50-க்கு விற்பனை | Tomato prices Rose in Koyambedu


சென்னை: கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை மீண்டும் ரூ.50 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மே மாதங்களில் வாட்டி வதைத்த கடும் வெயிலானது ஜூன் தொடக்கத்தில் இருந்து சற்றே குறைந்து ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியது. சென்னை உள்ளிட்ட இடங்களில் இன்று வரை தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கிலோ ரூ.50 ஆக உயர்ந்தது.

இடையில் மழை சற்று விடைவெளி விட்ட நிலையில், தக்காளி விலை கிலோ ரூ.27 ஆக குறைந்தது. கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகம் மற்றும் ஆந்திர எல்லையோர பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மீண்டும் தக்காளி விலை இன்று கிலோ ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. கேரட்டும் கிலோ ரூ.30-லிருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. மே இறுதி வாரத்தில் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டு வந்த பீன்ஸ், இன்று கிலோ ரூ.70 ஆக குறைந்துள்ளது.

மற்ற காய்கறிகளான பச்சை மிளகாய் ரூ.65, நூக்கல் ரூ.50, சாம்பார் வெங்காயம் ரூ.40, பாகற்காய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.28, முள்ளங்கி, பீட்ரூட் தலா ரூ.25, பெரிய வெங்காயம் ரூ.24, முருங்கைக்காய், வெண்டைக்காய் தலா ரூ.20, புடலங்காய் ரூ.15, முட்டைக்கோஸ் ரூ.12, கத்தரிக்காய் ரூ.10 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, ”கடந்த சில தினங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளி அனுப்பும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில எல்லையோர பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக பிற வியாபாரிகளும் தக்காளி வாங்க வருவதால், விலை உயர்ந்துள்ளது. இம்மாதம் முழுவதும் தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும்” என்றனர்.