சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.47,320 என்ற புதிய உச்சத்தை எட்டி விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு டிச.25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்பனையானது. 26-ம் தேதி ரூ.43,040 ஆக அதிகரித்தது.
பின்னர், ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது. குறிப்பாக கடந்த மார்ச் 5-ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.45,520-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.5,915-க்கும், பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.47,320-க்கும் விற்பனையானது. இதன்மூலம், தங்கம்விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதேபோல், 24 காரட் சுத்ததங்கத்தின் விலை பவுன் ரூ.51,080-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.83.50-க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.83,500-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து, தங்க நகை வியாபாரிகள் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. மேலும், உள்நாட்டிலும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் மற்றும் முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் அடுத்த ஓரிரு மாதங்களுக்கு தங்கம் விலை உயரக் கூடும்’’ என்றனர்.