EBM News Tamil
Leading News Portal in Tamil

மாருதி சுசுகி ஜிம்னி தண்டர் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: விலை உள்ளிட்ட விவரம் | maruti suzuki jimny thunder edition launched in india price details


சென்னை: மாருதி சுசுகி நிறுவனம் ஜிம்னி தண்டர் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஸெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்டுகளில் சிறப்பு பதிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனம்தான் மாருதி சுசுகி. இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறக்கும் நான்கு சக்கர வாகனங்களில் மாருதி சுசுகி நிறுவன கார்களின் பங்கு கொஞ்சம் அதிகம். பயணிகள் கார் சந்தையில் சுமார் 44 சதவீதத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்தியாவில் கார்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஜிம்னி தண்டர் எடிஷன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன் எக்ஸ் ஷோ-ரூம் விலை ரூ.10.74 லட்சம் முதல் ரூ.14.05 லட்சம் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜிம்னியின் அம்சங்கள் அப்படியே ஜிம்னி தண்டர் எடிஷனிலும் இடம் பெற்றுள்ளது. 1.5 லிட்டர், ஃபோர் சிலிண்டர், கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், லிட்டருக்கு 16+ கிலோ மீட்டர் மைலேஜ், ஃபோர் வீல் டிரைவ், 6 ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ரியர் வியூ கேமரா, பிரேக் அசிஸ்ட் ஃபங்ஷன் போன்றவை இடம் பெற்றுள்ளது.

ஆல்பா வேரியண்டில் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்றவை இடம்பெற்றுள்ளது.