பழைய இடத்தில் அனுமதி: ஈரோடு கனி ஜவுளிச்சந்தையில் விற்பனை தொடக்கம் | Permits at Old Location: Sales Start at Erode Kani Textile Market
ஈரோடு: கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கனி ஜவுளிச் சந்தை கடைகளில் வழக்கம் போல விற்பனை தொடங்கியது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே செயல்படும் கனி ஜவுளிச் சந்தையில், 200-க்கும் மேற்பட்ட நிரந்தரக் கடைகள் மற்றும் 730 வாரச் சந்தை கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த வளாகத்தில் ரூ.54 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய வணிக வளாகத்தில், கனி ஜவுளிச் சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படும் என தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வணிக வளாகம் கட்டப்பட்ட பின்பு, பொது ஏலம் மூலம் கடைகள் ஒதுக்கப்படும் எனவும், வாடகை மற்றும் முன்பணமாக பெரும் தொகையும் நிர்ணயிக்கப்பட்டது.
மாநகராட்சியின் இந்த செயல்பாட்டைக் கண்டித்து கனி ஜவுளிச் சந்தை வியாபாரிகள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். வியாபாரிகளின் இந்த எதிர்ப்பு காரணமாக, ஒருங்கிணைந்த வணிக வளாகம் இதுவரை செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனிடையே, நீதிமன்ற உத்தரவுப்படி, வணிக வளாகப் பகுதியில், செயல்பட்டு வந்த தற்காலிக ஜவுளிக் கடைகளை ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.
மேலும், வியாபாரிகளுக்கு மாற்று இடமும் அறிவித்தது. ஆனால், தீபாவளி வரை தொடர்ந்து கனி ஜவுளிச்சந்தையில் கடைகள் அதே இடத்தில் செயல்பட வேண்டும் என்ற வியாபாரிகளின் முறையீட்டை ஏற்ற நீதிமன்றம், டிசம்பர் 31-ம் தேதி வரை கடைகளை நடத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, பழைய இடத்தில் 86 தற்காலிக கடைகளை அமைக்க கட்டுமானப் பணிகள் முடிவடைந்து மின்சார வசதிகள் செய்து கொடுக்கப் பட்டது. இதனால், டிசம்பர் மாத இறுதி வரை ஜவுளி வியாபாரிகள் விற்பனையைத் தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு, மாநகராட்சி நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால், கடந்த மூன்று வாரங்களாக வாரச்சந்தை மற்றும் தினச் சந்தை வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் கனி ஜவுளிச்சந்தை வழக்கம் போல் செயல்பட்டது.
நேற்று நடந்த வாரச் சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைவாகவே இருந்ததால், குறைந்த அளவே வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், சில்லறை விற்பனை 35 சதவீதம் நடைபெற்றதாக தெரிவித்த வியாபாரிகள், கடைகள் பழைய இடத்தில் செயல்படத் தொடங்கியுள்ளதால், வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.