புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு அக்.2 முதல் மீண்டும் விமான சேவை | flight from Puducherry to Bengaluru from Oct 2
புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து அக்டோபர் 2 முதல் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது.
புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் 2015-ம்ஆண்டு ஏர் இந்தியா நிறுவனமும் புதுச்சேரியில் இருந்து பெங்களூரூவுக்கு விமான சேவையை தொடங்கின. ஆனால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் இச்சேவைகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில் மத்திய அரசு நாட்டில் விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில் புதிய விமான கெள்கையை அறிவித்தது. அதன்படி உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க விமான நிறுவனங்களுக்கு பாதி கட்டணத்தை, மத்திய அரசே ஏற்கும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. அத்திட்டத்தில் சேர்ந்து புதுச்சேரியில் தடைப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் தொடங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஐதராபாத்துக்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, மீண்டும் பெங்களூரூவுக்கு விமான சேவை தொடங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்து தொடங்கியது. பின்னர் இச்சேவைகள் அண்மைக் காலமாக செயல்படவில்லை. பராமரிப்பு காரணங்கள் என்று தெரிவித்திருந்தன. இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை வரும் அக்டோபர் 2 முதல் தினமும்செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஐதராபாத்திலிருந்து மதியம் 12.25 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 2 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். புதுச்சேரியிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு 3.20 மணிக்கு பெங்களூரு சென்றடையும். அங்கிருந்து டெல்லிக்கு இணைப்பு விமான சேவை தரப்படும். டெல்லிக்கு இரவு 11.20 மணிக்கு சென்றடைவார்கள்.
அதேபோல் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு 4.50 வந்தடையும். புதுச்சேரியிலிருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மாலை 6.35 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். அங்கிருந்து விசாகப்பட்டினத்துக்கு இணைப்பு சேவை உண்டு. இரவு 9.15 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கின்றனர்.