உரிய விலையும், விற்பனையும் இல்லை – சூளகிரியில் சாலையோரம் கொட்டப்படும் கொத்தமல்லி | No Fair Price and No Sale – Coriander Dumped on the Roadside on Shoolagiri
ஓசூர்: உரிய விலையும், விற்பனையும் இல்லாததால் சூளகிரி பகுதியில் சாலையோரங்களில் கொத்தமல்லி இலையை கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. சந்தை வாய்ப்பு மற்றும் சாகுபடி தொடர்பாக வேளாண்துறை மூலம் ஆலோசனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், மத்திகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி மற்றும் கீரை, புதினா, கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.
சந்தையில் கொத்தமல்லிக்கு ஆண்டு முழுவதும் வரவேற்பு உண்டு. இதனால், இச்சாகுபடி விவசாயிகளுக்குச் சந்தை வாய்ப்பு எப்போதும் இருக்கும். கொத்தமல்லி இலையைப் பொறுத்தவரைச் சந்தைக்கு வரத்து மற்றும் நுகர்வுத் தேவையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும். அதிகபட்சமாக ஒரு கட்டு ரூ.25 வரை விற்பனை செய்யப்படும்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சந்தைக்கு வரத்து அதிகரித்ததால், படிப்படியாக விலை குறைந்து நேற்று ஒரு கட்டு ரூ.2 முதல் ரூ.5 வரை விற்பனையானது. மேலும், வழக்கத்தை விட விற்பனையும் சரிந்தது.இதனால், போக்குவரத்து செலவு, அறுவடை கூலிக்கு கூட விலை கிடைக்காததால், பல விவசாயிகள் கொத்தமல்லி அறுவடையைத் தவிர்த்து வருகின்றனர். மேலும், விற்பனையாகாத கொத்தமல்லி கட்டுகளைச் சாலையோரங்களில் வீசி வருகின்றனர்.
இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: கடந்த மாதம் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டதால், பலர் குறைந்த நாட்களில் பலன் தரும் கொத்தமல்லி, கீரை சாகுபடியில் ஈடுபட்டோம். குறிப்பாக கொத்தமல்லியை அதிக விவசாயிகள் சாகுபடி செய்தனர். மேலும், கடந்த வாரம் பெய்த மழையால் கொத்தமல்லி விளைச்சல் வழக்கத்தை விட அதிகரித்தது.
இதனால், சந்தைக்கு வரத்து அதிகரித்து, விலை சரிந்துள்ளது. விவசாயிகளுக்குப் பயிர் சாகுபடி மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பாக முறையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.