EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவின் 9 முக்கிய நகரங்களில் விற்பனையாகாமல் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை 5.15 லட்சம் | number of unsold houses in 9 major cities of India is more than 5 lakh


புதுடெல்லி: தரவு ஆய்வு நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி, இந்தியாவில் விற்பனையாகாமல் இருக்கும் வீடுகள் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் 9 முக்கிய நகரங்களில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் ப்ராப்ஈக்விட்டி நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த 9 நகரங்களில் மொத்தம் 5,15,169 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. இவ்வாண்டு மார்ச் மாத நிலவரப்படி அந்த எண்ணிக்கை 5,26,914 ஆக இருந்தது. அந்த வகையில், மார்ச்சுடன் முடிந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் – ஜூன் காலண்டில் விற்கப்படாத வீடுகளின் எண்னிக்கை 2 சதவீதம் குறைந்துள்ளது.

அதிகபட்சமாக, மும்பையில் உள்ள தானே நகரில் அதிகபட்ச அளவில் வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் தானேயில், கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் 1.07 லட்சம் வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. இந்தப் பட்டியலில், மிகக் குறைந்த அளவாக, சென்னை யில் 19,900 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.

தானே (1,07,179), ஹைதராபாத் (99,989), புனே (75,905), மும்பை (60,911), பெங்களூரு (52,208), டெல்லி (42,133), நவி மும்பை (32,997), கொல்கத்தா (21,947), சென்னை (19,900) என்ற எண்ணிக்கையில் வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. ஜனவரி – மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில், சென்னையில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 18 சதவீதம் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.