EBM News Tamil
Leading News Portal in Tamil

ரூ.8 லட்சம் பட்ஜெட்டிற்குள் 5 கார்கள்

இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில், காம்பேக்ட் எஸ்யூவி (ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெகிக்கிள்) ரக கார்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்திய மார்க்கெட்டில் தற்போது, 8 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும், ஹாட் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்கள் குறித்த தகவல்கள் இதோ…
மாருதி சுசூகி விட்டார பிரீஸா
2016ம் ஆண்டு நடைபெற்ற 13-வது ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுசூகி விட்டார பிரீஸா கார் அறிமுகம் செய்யப்பட்டது. சந்தைக்கு வந்த ஒரு மாதத்திற்கு உள்ளாகவே, சாதனை அளவாக 40,000 கார்கள் புக்கிங் செய்யப்பட்டுவிட்டன. மாருதி சுசூகி விட்டார பிரீஸா காரின் பளபளப்பான கருப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் ட்யூயல் டோன் எக்ஸ்ட்டீரியர் பெயிண்ட் ஆகியவை வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. இந்த மாடலில் இன்றுவரை பெட்ரோல் வேரியண்ட் இல்லை. 4 டீசல் வேரியண்ட்கள் மட்டுமே கிடைக்கின்றன. இந்த காரில், டிரைவர் மற்றும் பயணிகளுக்கு ஏர் பேக், எலக்ட்ரோ மேக்னடிக் டெயில் கேட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் 90 பிஎஸ் பவர், 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மாருதி சுசூகி விட்டாரா பிரீஸா கார் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை 7.57 லட்சம்.
ரெனால்ட் டஸ்டர்
இந்த காரில், கீ லெஸ் என்ட்ரி வசதி உள்ளது. 2 ஏர் பேக், ஏபிஎஸ், இபிடி வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் ரெனால்ட் டஸ்டர் காரின் ஆரம்ப விலை 7.9 லட்சம் ரூபாய். இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 121 பிஎஸ், 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். ஒரு லிட்டருக்கு 14.2 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும் என ரெனால்ட் அறிவித்துள்ளது.
டாடா நெக்ஸான்
புரொஜெக்டர் ஹெட்லைட், ரியர் ஸ்பிளிட் எல்இடி டெயில்லைட், பகல் நேரத்திலும் எரியக்கூடிய டிஆர்எல்எஸ் உள்ளிட்டவை டாடா நெக்ஸான் காருக்கு நல்ல தோற்றத்தை கொடுத்துள்ளன. இதில், பின்பக்கத்திலும் ஏசி வெண்ட், க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. டாடா நெக்ஸான் காரில் 2 ஏர் பேக், ஏபிஎஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் நிலையானவையாக கொடுக்கப்பட்டுள்ளன. XZ வேரியண்ட் (7.98 லட்சம் ரூபாய்) வசதிகள் பட்டியலில், பார்க்கிங் சென்சார்களும் இடம்பெற்றுள்ளன. 110 பிஎஸ் பவர், 170 என்எம் டார்க் திறனை உருவாக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 110 பிஎஸ், 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளிட்ட ஆப்ஷன்களில் டாடா நெக்ஸான் கார் கிடைக்கிறது. பேஸ் வேரியண்ட்டான நெக்ஸான் XE (பெட்ரோல்) வேரியண்ட் வெறும் ₹6.15 லட்சத்திற்கு கிடைக்கிறது. மற்றொரு அடிப்படை வேரியண்ட்டான XE (டீசல்) வேரியண்ட்டின் விலை 7.18 லட்சம் ரூபாய்.
போர்டு எகோ ஸ்போர்ட்
ஸ்போர்ட்டி லுக் கொண்ட எகோ ஸ்போர்ட் கார் பெட்ரோல், டீசன் என 2 இன்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. ஆனால், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே 8 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் (7.82 லட்சம் ரூபாய்) வருகிறது. மற்ற அனைத்து வேரியண்ட்களும் 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில்தான் கிடைக்கின்றன. இது, 121 பிஎஸ், 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. போர்டு எகோ ஸ்போர்ட் காரில், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஏபிஎஸ், இபிடி (எலக்ட்ரானிக் பிரேக்போர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன்), 2 ஏர் பேக் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
மகேந்திரா நுவோ ஸ்போர்ட்
ஏழு பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்தான் மகேந்திரா நுவோ ஸ்போர்ட். நல்ல இடவசதி இருந்தாலும்கூட இதன் பேஸ் வேரியண்ட்டில் ஏர் பேக், ஏபிஎஸ், இபிடி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. இதில், 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 100 பிஎஸ், 240 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கும்.
இரண்டு புதிய கார்களை களம் இறக்கும் ஹோண்டா
இந்தியாவில், 2 புதிய எஸ்யூவி ரக (ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெகிக்கிள்) கார் மாடல்களை அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களில் ஒன்று 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான காம்பேக்ட் மாடலாக இருக்கும். மாருதி பிரெஸ்ஸா, போர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸான் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இது இருக்கும். மற்றொரு மாடல், ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட மாடல்களுக்கு நேரடி போட்டியை தரும் ரகத்தில் இருக்கும். இந்த இரண்டு மாடல்களுமே, புதிய ஹோண்டா அமேஸ் கார் உருவாக்கப்பட்ட பிளாட்பார்மில்தான் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய காம்பேக்ட் ரக கார் விலையை மிக சவாலாக நிர்ணயிக்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இது மிகச்சிறந்த இடவசதியையும் பெற்றிருக்கும். இரண்டாவது மாடலானது சற்று பிரிமியம் மாடலாக இருக்கும். இது, 5 சீட்டர் மாடலா அல்லது 7 சீட்டர் மாடலா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், விலை அடிப்படையில், ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக இருக்கும். தற்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டா கார்களில் பயன்படுத்தப்படும் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த இரண்டு புதிய கார்களிலும் பயன்படுத்தப்பட உள்ளது.
காம்பேக்ட் ரக மாடலில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், 1.5 லிட்டர் டீசல் இன்ஜினும் பயன்படுத்தப்படும். சற்று பிரிமியம் மாடலில் ஹோண்டா சிட்டி இன்ஜின் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்படும். எஸ்யூவி ரக கார் மார்க்கெட்டில் இருக்கும் வலுவான வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக இந்த இரண்டு புதிய மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஹோண்டா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. காம்பேக்ட் ரக மாடல் ரூ.7 லட்சம், பிரிமியம் ரக மாடல் ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்
படுகிறது.