கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு | crops loan issue in cooperative banks at madurai
மதுரை: தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பயிர்க்கடன், கறவை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்புக்கான கடன், தங்க நகைக் கடனை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் உரங்கள் மற்றும் விவசாயத்துக்கு தேவையான கருவிகளையும் பெற்று வருகி்ன்றனர்.
தற்போது கூட்டுறவு வங்கிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளதால், குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பலர் பயிர்க்கடன் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகள் அனைவருக்கும் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.மணிகண்டன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 4,474 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளன மதுரை மாவட்டத்தில் 280 வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகள் மத்திய கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 6 சதவீத வட்டியில் கடன் பெற்று விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் கடன் வழங்குகின்றன. அந்த கடன் தொகையை 364 நாட்களுக்குள் கட்டிவிட்டால் வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
பயிர்க்கடனாக ஓர் ஏக்கர் வாழைக்கு ரூ.70,000, மல்லிகைப்பூவுக்கு ரூ.47,600, நெல்லுக்கு ரூ.23,000, கரும்புக்கு ரூ.70,000 வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு குறைந்தபட்சமாக ரூ.47,000, அதிகபட்சமாக ரூ.1,59,000 கடனாக வழங்கப்படுகிறது. தற்போது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஒன்றுக்கு ரூ.1 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு மட்டும்தான் பயிர்க்கடன் கிடைக்கிறது.
ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்தால் மேலும் ஏராளமான விவசாயிகள் பயன்பெற முடியும். விதை, உரம், இடுபொருட்களின் செலவு அதிகரித்துள்ளதால் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் கடன் தொகை வழங்க வேண்டும். கடன் தொகைக்கான வட்டியை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் கடன் தொகை தள்ளுபடியாகும் என்ற மனநிலையில் உள்ளனர். விவசாயிகள் சிலர் குறித்த காலத்துக்குள் கடன் தொகையை கட்டிவிடுகின்றனர்.
அத்தகைய விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்குகிறோம். இருந்தாலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். நிதி கிடைத்தவுடன் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கப்படும் என்று கூறினார்.