EBM News Tamil
Leading News Portal in Tamil

ஏஐ விரிவாக்கத்துக்காக இந்தியாவில் ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு: மைக்ரோசாப்ட்​ சிஇஓ சத்ய நாதெள்ளா தகவல்​ | Microsoft plans $3 bn boost for Indias AI future


இந்தியாவில் கிளவுடு மற்றும் ஏஐ கட்டமைப்பை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்ய நாதெள்ளா இந்தியா வந்துள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கட்டமைப்பை விரிவாக்கம் செய்வது குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ‘மைக்ரோசாப்ட் ஏஐ டூர்’ நிகழ்ச்சியில் சத்ய நாதெள்ளா பேசியதாவது: இந்தியாவின் கிளவுடு மற்றும் செயற்கை நுண்ணறிவு திறனை மேம்படுத்துவதற்காக அடுத்த 2 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 3 பில்லியன் டாலரை (ரூ.25 ஆயிரம் கோடி) முதலீடு செய்ய உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முதலீடு, அதிகரித்து வரும் கிளவுடு சேவைகள் மற்றும் ஏஐ கட்டமைப்புக்கு ஆதரவு அளிக்கும். இதன்மூலம் வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி பேருக்கு ஏஐ குறித்து பயிற்சி அளிப்பதுதான் எங்கள் நோக்கம்.

எங்கள் நிறுவனம் இந்தியாவில் பிராந்திய அளவில் பரவலாக விரிவாக்கம் செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் நிறுவனத்துக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற மைக்ரோசாப்டின் நோக்கம்தான் இந்த நிறுவனத்தை இயக்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.