2024-ல் ஆட்டோமொபைல் விற்பனையில் இந்தியா 9.1% முன்னேற்றம் | India logs 9.1% jump in automobile sales in 2024 with growth in most segments
புதுடெல்லி: இந்தியாவில் சில்லறை ஆட்டோமொபைல் விற்பனை 2024-ல் 9.1 சதவீதம் அதிகரித்து 2.61 கோடி வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.
இந்தியாவில் பல்வேறு வகையான வாகனங்களின் விற்பனை குறித்த தரவுகளை ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (FADA) வெளியிட்டு வருகிறது. அதன் விவரம் வருமாறு: 2024-ம் ஆண்டில் மொத்தம் 2 கோடியே 61 லட்சத்து 7 ஆயிரத்து 679 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. 2023ம் ஆண்டில் 2 கோடியே 39 லட்சத்து 28 ஆயிரத்து 293 வாகனங்கள் விற்பனையான நிலையில், 2024ம் ஆண்டில் கூடுதலாக 21,79,386 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. 2023 ஆண்டோடு ஒப்பிடுகையில் 2024ம் ஆண்டில் சராசரியாக 9.11 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பிரிவு வாரியாக, இரு சக்கர வாகனங்கள் விற்பனை 10.78 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் 10.49 சதவீதமும், பயணிகள் வாகனங்கள் 5.18 சதவீதமும், டிராக்டர் 2.55 சதவீதமும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன, அதே நேரத்தில் வணிக வாகனங்களின் வளர்ச்சி 0.07 சதவீதமாக உள்ளது.
2024 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில், ஒட்டுமொத்த சில்லறை ஆட்டோமொபைல் விற்பனை 12.4 சதவீதம் குறைந்துள்ளது. இரு சக்கர வாகனங்கள் (-17.6 சதவீதம்), மூன்று சக்கர வாகனங்கள் (-4.5 சதவீதம்), பயணிகள் வாகனங்கள் (-1.9 சதவீதம்) மற்றும் வணிக வாகனங்கள் (-5.2 சதவீதம்) வளர்ச்சியை எதிர்கொள்கின்றன. டிசம்பரில் டிராக்டர் மட்டுமே விற்பனையில் ஆண்டுக்கு 25.7 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஏறக்குறைய 48 சதவீத ஆட்டோமொபைல் டீலர்கள் ஜனவரி மாதத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள். 10.69 சதவீதம் பேர் மந்தநிலையை எதிர்பார்க்கிறார்கள். நீண்ட கால நோக்கில் 2025-ம் ஆண்டு முழுவதையும் கருத்தில் கொண்டு, 66 சதவீத டீலர்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள். 26.72 சதவீதம் பேர் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கிறார்கள். 6.87 சதவீதம் பேர் மட்டுமே சரிவை எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.