அதிக வட்டி விகிதம் ஏற்றுமதி நடவடிக்கைகளை பாதிக்கிறது: சிஐஐ எக்ஸிம் குழு தலைவர் கருத்து | High interest rates are hurting export activities
அதிக வட்டி விகிதம் இந்தியாவின் ஏற்றுமதி நடவடிக்கைகளை பாதிப்பதாக உள்ளது என சிஐஐ-யின் எக்ஸிம் குழு தலைவர் சஞ்சய் புதியா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ அதிக வட்டி விகிதங்கள் மற்றும் ஏற்றுமதிக்கான நிதியுதவிகள் குறைந்து போனது உள்ளிட்டவற்றால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பல சவால்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, அவர்கள் சர்வதேச சந்தையில் போட்டியிட முடியாத சூழல் நிலவி வருகிறது. அத்துடன் கணிசமான அளவுக்கு நிதிப்பற்றாக்குறையையும் இந்திய ஏற்றுமதியாளர்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்பிரச்சினைக்கு மத்திய அரசும், வங்கிகளும் இணைந்து பயனுள்ள தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதே ஏற்றுமதியாளர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
மத்திய அரசின் வட்டி சமன்படுத்தும் திட்டம் 2024 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் உள்ளிட்ட தயாரிப்பு துறையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு இந்த திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்திய ஏற்றுமதியின் முதுகெலும்பாக விளங்கும், எம்எஸ்எம்இ ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய கடனுக்கான வட்டி மானியத்தை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமா உயர்த்தப்படுவதன் மூலம் பெரிதும் பயனடைவார்கள். அதிலும் குறிப்பாக, காலணி, பொறியியல், ஆடை, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறைக்கு இது மிகப்பெரிய ஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.