EBM News Tamil
Leading News Portal in Tamil

கறவை மாடு கடன் வழங்க மறுக்கும் கூட்டுறவு வங்கிகள் – நடப்பது என்ன? | about co operative banks refuse to give cow loan issue in madurai


மதுரை: விவசாயத்துக்கு மாற்றாகவும் இணைத் தொழிலாகவும் உள்ள கறவை மாடு வளர்ப்புக்கு கூட்டுறவு வங்கிகள் வட்டியில்லா கடன் வழங்க மறுப்பதால், கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

விவசாயத்தில் விதைகள், உரங்கள், இடுபொருட்கள் விலை உயர்வு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், அறுவடையின்போது போதிய விலை கிடைக்காமல் கடன் சுமைக்கு ஆளாகின்றனர். இதனால் விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை என்பதால் மாற்றுத் தொழிலுக்கும் மாறி வருகின்றனர்.

விவசாயத்துக்கு இணை தொழிலாக கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் இதன் மூலம் விவசாயிகள் ஓரளவு பொருளாதார மேம்பாடு அடைகின்றனர்.

இதனை ஊக்கப்படுத்தும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் கறவை மாடுகளுக்கு வட்டியில்லா கடன் கொடுத்து வந்தனர். தற்போது சில ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கறவை மாடுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க மறுத்து வருகின்றனர். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களி டமிருந்து கூடுதல் வட்டிக்கு கடன் பெறுகின்றனர்.

இதனை திருப்பிச் செலுத்த முடியாமலும், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் கெடுபிடியாலும் தற்கொலை செய்யும் நிலையும் ஏற்படுகிறது. இதனை போக்க கறவை மாடு வாங்க வட்டியில்லா கடன் வழங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில கவுரவ தலைவர் எம்பி.ராமன் கூறுகையில், கிராமப்புறங்களில் உள்ள ஏழைகள் பொருளாதார வளர்ச்சி அடையும் வகையில் தொடக்க கூட்டுறவு வங்கிகளில் கறவை மாடுகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது.

இதனை ஓராண்டுக்குள் விவசாயிகள் திருப்பிச் செலுத்த வேண்டும். சில ஆண்டாக தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் வட்டியில்லா கடன் வழங்க மறுக்கின்றன. அங்குள்ள செயலாளர்களிடம் கேட்டால் மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்கின்றனர். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்திடம் அதிக வட்டிக்கு கடன் பெறுகின்றனர்.

கூட்டுறவு வங்கிகளின் செயல் தனியாருக்கு சாதகமாக உள்ளது. எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலிருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நிதி ஒதுக்கீடு கேட்டு கருத்துரு அனுப்பியுள்ளோம். அரசு நிதி ஒதுக்கீடு செய்தால் உடனடியாக வழங்குவோம் என்றார்.