10 நிமிட ஆம்புலன்ஸ் சேவை – பிளிங்கிட் நிறுவனம் முன்முயற்சி! | Blinkit launches ambulance service in Gurugram
புதுடெல்லி: சொமேட்டோவின் துணை நிறுவனமான பிளிங்கிட் (Blinkit) 10 நிமிட ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக ஐந்து ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் இந்த சேவை குருகிராமில் தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக மற்ற நகரங்களுக்கு விரிவுப்படுத்தும் திட்டம் இருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ அல்பிந்தர் திந்த்சா தெரிவித்துள்ளார்.
இந்தத் தளத்தில் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகை உள்ளிட்ட பொருட்களை டெலிவரி செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் ஆம்புலன்ஸ் சேவையை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பிளிங்கிட் நிறுவன செயலியை பயன்படுத்தும் பயனர்கள் அதில் ஆம்புலன்ஸை அழைப்பதற்கான ஆப்ஷன் மூலம் தங்கள் அவசர மருத்துவ தேவைக்கு தொடர்பு கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. செயலியில் ‘பேஸிக் லைஃப் சப்போர்ட்’ என உள்ள ஆப்ஷன் மூலம் ஆம்புலன்ஸை பயனர்கள் அழைக்கலாம் என அல்பிந்தர் திந்த்சா கூறியுள்ளார்.
பிளிங்கிட் நிறுவன ஆம்புலன்ஸில் அத்தியாவசிய மருத்துவ கருவிகளுடன் ஆக்ஸிஜன் சிலிண்டர், மானிட்டர் மற்றும் ஸ்ட்ரெச்சர்கள் போன்ற மருத்துவ உபகரணங்கள் இருப்பதாக எக்ஸ் தள பதிவில் அல்பிந்தர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆம்புலன்சில் பாரா மெடிக்கல் வல்லுநர், உதவியாளர் மற்றும் ஓட்டுநர் இருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், லாப நோக்கமின்றி வாடிக்கையாளர்களுக்கு மலிவான கட்டணத்தில் இந்த 10 நிமிட ஆம்புலன்ஸ் சேவையை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஆம்புலன்ஸ் சேவையை விரிவு செய்ய உள்ளதாக பிளிங்கிட் தெரிவித்துள்ளது.