EBM News Tamil
Leading News Portal in Tamil

எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனுக்கு சிஐஐ கோரிக்கை | Excise duty on fuel should be reduced


எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சிஐஐ கோரிக்கை வைத்துள்ளது.

வரும் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் கருத்துகளை கேட்டு வருகிறார்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) வைத்துள்ள கோரிக்கைகள் வருமாறு:

பெட்ரோல், டீசல் மீது மத்திய கலால் வரி 21 சதவீதம் விதிக்கப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து கச்சா எண்ணெய் விலை 40 சதவீதம் குறைந்தபோதிலும், கலால் வரி குறைக்கப்படவில்லை. இப்போது பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கு எரிபொருள் விலை முக்கிய காரணமாக உள்ளது. எனவே, எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்.

கடந்த சில காலாண்டுகளாக கிராமப்பகுதியில் நுகர்வு அதிகரித்து வருகிறது. அதேநேரம், உணவு பணவீக்கம் அதிகரித்து வருவதால் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த குறைந்த வருவாய் ஈட்டும் மக்களின் நுகர்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, நுகர்வை ஊக்குவிக்க மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட பயனாளிகளின் குறைந்தபட்ச தினசரி கூலியை ரூ.267-லிருந்து ரூ.375 ஆக அதிகரிக்க வேண்டும். இதுபோல, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பிஎம் கிஸான் உதவித் தொகையை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்த வேண்டும். இதன்மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.