நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வித்திட்ட மன்மோகன்! | about manmohan contributed to the country economic progress was explained
கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக மன்மோகன் சிங் பணியாற்றினார். அப்போது தாராளமயமாக்கத்தின் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை அவர் வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். எந்த தொழில் செய்தாலும் உரிமம்பெற வேண்டும் என்ற முறையை அவர் குறைத்தார். விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி, தொழில் துறையில் அரசு தலையீட்டை குறைத்தார். இது தொழில்துறைக்கு உத்வேகம் அளித்தது.
மேலும் வர்த்தக சீர்திருத்தங்களை மன்மோகன் சிங் அறிமுகப்படுத்தினார். இறக்குமதி வரியை குறைத்து, திறந்தவெளி சந்தை பொருளாதாரத்தை ஏற்படுத்தினார். நாட்டின் முக்கிய துறைகளில் அவர் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தார். அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்களால் நாடு தொடர்ந்து பலன் அடைந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டது.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தபோதும், அதை இந்தியாவின் ஏற்றுமதிக்கு சாதகமாக்கி ஏற்றுமதி திறனை ஊக்குவித்தார். வரியை எளிமையாக்க அவர் வரி சீர்திருத்தங்களை கொண்டு வந்து, வரி அமைப்பை விரிவுபடுத்தினார். இதனால் அவரது காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய தொடங்கியது. கடந்த 1991-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி அவர் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, ‘‘நான் கொண்டு வரும் சீர்த்திருத்தங்கள் அமல்படுத்தப்படும்போது, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும்’’ என நாடாளுமன்றத்தில் நம்பிக்கையுடன் அவர் கூறினார்.
நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்பேற்ற போது, நாடு நிலையான பொருளாதார வளர்ச்சியை கண்டது. அவரது முதல் ஆட்சியில் நாட்டின் ஆண்டு சராசரி வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருந்தது. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை நாட்டின் வளர்ச்சி வீதம் சுமார் 6.7 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
கடந்த 2008-ம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டபோதும், இந்திய பொருளாதாரத்தை குறைந்த பாதிப்புடன் அவர் கொண்டு சென்றார். தீவிரமான எதிர் சுழற்சி நடவடிக் கைகளை மன்மோகன் சிங் அரசு மேற்கொண்டது. இந்திய ரிசர்வ் வங்கி நிதி கொள்கைகளை வெகுவாக தளர்ச்சி, உள்நாட்டு தேவையை அதிகரிப்பதற்கான நிதி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தையும் மன்மோகன் சிங்தான் அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் கிராமத்தில் உள்ளவர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பை உறுதி செய்ததால், இது கிராமப்புற மக்களின் ஏழ்மையை ஒழித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது.
மக்கள் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில் பல சிக்கல்கள் இருந்ததால், மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் முறை கொண்டுவரப்பட்டு தற்போது வெற்றியடைந்துள்ளது. இதற்கு மன்மோகன் சிங் முன் முயற்சியால் தொடங்கப்பட்ட ஆதார் திட்டம்தான் அடிப்படையாக அமைந்தது. மக்கள் நலத்திட்டங்களில் ஆதார் மிக முக்கியமானதாக மாறியது.
இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற சிவில் அணுசக்தி ஒப்பந்தத்திலும் மன்மோகன் சிங் முக்கிய பங்காற்றினார். இதற்கு எதிர்க்கட்சிகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது அணு சக்தி பற்றி பேசிய மன்மோகன் சிங், ‘‘சிவில் அணுசக்தி நடவடிக்கை நாட்டுக்கும், உலகத்துக்கும் நல்லது.
நிலையான வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பை நோக்கி நாம் செல்லும்போது, ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு அணு சக்தியை பயன்படுத்துவதுதான் சிறந்தது’’ என்றார். நாட்டின் நிதியமைச்சராகவும், பிரதமராகவும், மன்மோகன் சிங் பணியாற்றிய காலம், இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது . அவரது தொலைநோக்கு கொள்கைகள் நவீன இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தன.