EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு | huge drop in share market


மும்பை: அந்நிய முதலீட்டாளர்களின் கவனம் சீன சந்தைகளின் பக்கம் திரும்பியதையடுத்து இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றும் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.

மந்த கதியில் உள்ள பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலான சலுகை திட்ட அறிவிப்புகளை சீன அரசு வெளியிட்டுள்ளது. மேலும், சீன மத்திய வங்கியும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், அந்நிய முதலீட்டாளர்களின் கவனம் சீன சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும், புவிசார் அரசியலில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க புள்ளிவிவர எதிர்பார்ப்பு ஆகியவையும் சந்தையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின.

இதனால், நேற்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, ஆக்ஸிஸ் பங்குகளின் விலை சரிந்தன. இவை தவிர, இன்போசிஸ், பார்திஏர்டெல், எஸ்பிஐ, ஐடிசி பங்குகள்குறைந்த விலைக்கு கைமாறியதும் சந்தையின் கடும் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

மும்பை பங்குச் சந்தை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,272 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 84,299 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டி குறியீட்டெண் 368 புள்ளிகள் குறைந்து 25,810 புள்ளிகளில் நிலைகொண்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு ரூ.3.55 லட்சம் கோடி சரிந்து ரூ.474.38 லட்சம் கோடி யானது.