EBM News Tamil
Leading News Portal in Tamil

“உத்தராகண்ட் 10 ஆண்டுகளில் தொழில் மாநிலமாகும்” – டேராடூன் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை | PM Modi inaugurates Global Investors Meet at Uttarakhand


புதுடெல்லி: உத்தராகண்டில் சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று டேராடூனில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், அடுத்த 10 ஆண்டுகளில் உத்தராகண்ட் மிகப் பெரிய தொழில் மாநிலமாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டு இன்று தொடங்கியது. உத்தராகண்டின் ஆளுநர் குர்மீத் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் ராம்தேவ் மற்றும் சர்வதேச தொழில் அதிபர்கள் இதில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து வைத்து உரையாற்றினார். அவர் பேசியது: “உத்தராகண்ட்டில் சிறந்த உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. ரயில்வே கட்டமைப்பு விரிவாக்கப்படுகிறது. இந்த மேம்பாடுகள் வழியாக, தொழில் துறையினரை ஈர்க்கும் மாநிலமாக உத்தராகண்ட் உருவெடுத்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் உத்தராகண்ட் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டும். இந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் மலைப் பிரதேசமான உத்தராகண்ட் ஒரு தொழில் மாநிலமாக மாறும்.

கரோனா உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல், அரசியல் சூழல் காரணமாக தற்போது சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்படுகிறது. ஆனால், இத்தகைய நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் உள்ளது.2030-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும். நாட்டை முன்னேற்ற மத்திய அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தபடி உள்ளது. நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 13 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். உள்ளூர் தயாரிப்புகளுக்கு நாம் முக்கியத்துவம் வழங்க வேண்டும். அவற்றை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும்.

இதன்மூலம் நாட்டின் பொருளாதாரமும் தொழில் வாய்ப்புகளும் மேம்படுவதோடு, மற்ற நாடுகளை நாம் சார்ந்திருப்பதற்கான தேவையும் குறைகிறது. இந்திய மக்கள் நிலையான அரசையே விரும்புகின்றனர். சமீபத்திய சட்டமன்ற தேர்தல்களில் அதை மீண்டும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்த முறை ஆட்சியிலும் எங்கள் அரசே தொடரும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

கடந்த ஆண்டு பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா பொருளாதார ரீதியாக உலகின் 5-வது பெரிய நாடாக மாறியது. இந்நிலையில், 2030-ம் ஆண்டுக்குள், ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஜிடிபி 2022 நிலவரப்படி 3.5 டிரில்லியன் டாலராக உள்ளது. இது 2030-ம் ஆண்டில் 7.3 டிரில்லியன் டாலராக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உத்தராகண்ட்டில் நடைபெறும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் சுமார் 5,000 முதலீட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கு முன்பாக தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் பாஜக முதல்வரான புஷ்கர் சிங் தாமி முதலீட்டாளர்கள் கூட்டங்களை நடத்தி இருந்தார். சில நாடுகளிலும் நடைபெற்ற இந்த கூட்டங்களில் ரூ.3.5 லட்சம் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் உத்தராகண்ட் அரசுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.