EBM News Tamil
Leading News Portal in Tamil

ரெப்போ விகிதம் 6.5% ஆக தொடரும்: 5-வது முறையாக மாற்றம் செய்யாத ரிசர்வ் வங்கி | RBI keeps repo rate unchanged at 6.5%


மும்பை: ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி தொடர்ந்து 5வது முறையாக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் முந்தைய அளவிலேயே தொடரச் செய்துள்ளது.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இருமாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரெப்போ விகிதத்தில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், நடப்பு நிதி ஆண்டில் ஜிடிபி 7 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ”பெருநிலை பொருளாதார வளர்ச்சிப் போக்கினை தீவிரமாக ஆராய்ந்து, நிதி வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு 6.5 சதவீதம் என்றளவிலேயே ரெப்போ வட்டி விகிதத்தைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.