முதல்வர் திறந்து வைத்து 5 மாதமாகியும் புதிதாக கட்டப்பட்ட சேலம் – வஉசி பூ மார்க்கெட் பயன்பாட்டுக்கு வராததால் வேதனை | new construction flower market issue in salem
சேலம்: சேலம் சின்ன கடைவீதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வஉசி பூ மார்க்கெட் கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து 5 மாதமாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பூ மார்க்கெட் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் சின்ன கடைவீதி பகுதியில் வஉசி பூ மார்க்கெட் மற்றம் காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தது. இந்நிலையில் அந்த இடத்தில் மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ் புதியதாக நான்கு தளம் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம் கட்டப்பட்டது. இதில் இறைச்சி கடை, காய்கறி கடை, பூ மார்க்கெட் உள்ளிட்டவைக்கு இடம் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வஉசி மார்க்கெட் கட்டுமான பணி தொடங்கியதில் இருந்து சேலம் போஸ் மைதானத்தில் தற்காலிகமாக கடைகள் அமைத்து கடந்த சில ஆண்டுகளாக பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், சின்ன கடைவீதியில் கட்டப்பட்ட வஉசி பூ மார்க்கெட் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து கடந்த ஜூன் 12-ம் தேதி திறப்பு விழா நடந்தது. சேலம் வந்திருந்த முதல்வர் ஸ்டாலின், ஈரடுக்கு பேருந்து நிலையம், வஉசி பூ மார்க்கெட், ஆனந்தா பாலம் அருகே கார் பார்க்கிங் கட்டிடம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.
ஈரடுக்கு பேருந்து நிலையம் திறப்பு விழாவையொட்டி போஸ் மைதானத்தில் செயல்பட்டு வந்த வஉசி பூ மார்க்கெட் பழைய பேருந்து நிலையம் வணிக வளாக கட்டிடத்தின் பார்க்கிங் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டது. எவ்வித வசதியுமின்றி வணிக கடைகளுக்கு முன்பாக சாலையில் கடை விரித்து வியாபாரிகள் பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். புதிதாக கட்டப்பட்ட வஉசி பூ மார்க்கெட்டை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து 5 மாதம் கடந்தும் பூக்கடைகளை இடம் மாற்ற மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விரைந்து கடைகள் ஒதுக்கப்பட்டு பூ மார்க்கெட் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வஉசி பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது: சேலம் பழைய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் கடும் இடநெருக்கடிக்கு மத்தியில் பூக்களை வியாபாரம் செய்து வருகிறோம். மேலும், பார்க்கிங் பகுதியில் கடை வைக்கப்பட்டுள்ளதால் வணிக வளாக கடைகளுக்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் வர மறுப்பதாகவும், இதனால், வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கடைக்காரர்கள் புகார் கூறுகின்றனர். மேலும், பூ மார்க்கெட்டை புதிய கட்டிடத்துக்கு இடமாற்ற வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
வஉசி பூ மார்க்கெட் புதிய கடை வாடகை வசூல் தொடர்பாக ஏலம் விட்டு, விரைந்து புதிய கட்டிடத்துக்கு பூ மார்க்கெட்டை மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே, பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிக கடை வைத்தபோது வியாபாரிகளிடம் அரசியல் கட்சியினர் பணம் வசூலித்த நிலையில், புதிய கட்டிடத்தில் கடை வைக்கவும் வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் வஉசி பூ மார்க்கெட்டை தனியாரிடம் குத்தகைக்கு விடுவதை தவிர்த்து, மாநகராட்சியே ஊழியர்கள் மூலம் நேரடியாக குத்தகை பணம் வசூலிக்க வேண்டும். இதன்மூலம், மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும், வியாபாரிகளும் தனியாரின் வசூல் வேட்டையில் இருந்து விடுபட வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.