EBM News Tamil
Leading News Portal in Tamil

டி20 போட்டி: மே.இ.தீவுகளுக்குப் பதிலடி கொடுத்த வங்கதேசம்

சகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோரின் அரைசதத்தால் புளோரிடாவில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்கதேசம்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி2-0 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன், 1-1 என்று சமநிலையில் உள்ளன. அரைசதம் அடித்த வங்கதேச வீரர் தமிம் இக்பாலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
அமெரிக்காவில் பயணம் செய்து வங்கதேசம், மேற்கிந்தியத்தீவுகள் அணி டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றன. புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் 2-வது டி20 போட்டி இன்று நடந்தது.
டாஸ்வென்ற மேற்கிந்தியத்தீவுகள் கேப்டன் பிராத்வெய்ட் பீல்டிங் செய்யத் தீர்மானித்தார். இதையடுத்து, முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.
வங்கதேசம் அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்களான லிட்டன் தாஸ்(1), முஸ்பிகுர் ரஹிம்(4), சவுமியா சர்க்கார்(14) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
4-வது விக்கெட்டுக்கு தமிம் இக்பால், சகிப் அல் ஹசன் ஆகியோர் கூட்டணி அணியைச் சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய தமிம் இஸ்பால் 44 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
சகிப் அல்ஹசன் 38 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். மகமதுல்லா 11 ரன்களுடனும், ஆரிபுல் ஹக் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் நர்ஸ், பால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது.
மேற்கித்தியத்தீவுகள் அணி தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. லீவிஸ்(1), ரஸல்(17), சாமுவேல்ஸ்(10) ராம்தின்(5), பிராத்வெய்ட்(11), நர்ஸ்(16) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆனால், தொடக்க ஆட்டக்காரர் பிளட்சர் (38பந்துகள்) 43 ரன்கள், ரோவ்மேன் பாவெல் (34பந்துகள்) 43 ரன்கள் சேர்த்து அணியை ஓரளவுக்குக் கவுரமான ஸ்கோரை எட்ட உதவினார்கள்.
ஆனால், வங்கதேச அணியினரின் கட்டுக்கோப்பான வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சால் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால், ரன்சேர்க்க முடியாத நெருக்கடிக்கு மேற்கித்தியத்தீவுகள் அணி தள்ளப்பட்டது. பத்ரீ ஒரு ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வங்கதேசம் தரப்பில் முஸ்தபிகுர் ரஹ்மான், நஸ்முல் இஸ்லாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.