GT vs PBKS | ஷஷாங், அஷுதோஷ் அதிரடி பேட்டிங்: குஜராத்தை வென்ற பஞ்சாப் | Shashank Singh Ashutosh knock helps Punjab kings to beat gujarat titans
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 17-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதில் பஞ்சாப் அணிக்காக ஷஷாங் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோர் சிறப்பாக பேட் செய்திருந்தனர்.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி விரட்டியது. கேப்டன் ஷிகர் தவன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். தவன், 1 ரன்னில் போல்ட் ஆனார். பேர்ஸ்டோ, 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். பிரப்சிம்ரன் சிங், 24 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். சாம் கரன் 5 ரன்களிலும், சிக்கந்தர் ரஸா 15 ரன்களிலும் வெளியேறினர்.
ஷஷாங் சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா இணைந்து 39 ரன்கள் சேர்த்தனர். ரஷித் கான் வீசிய 16-வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசி, மூன்றாவது சிக்ஸருக்கு முயன்று ஆட்டமிழந்தார் ஜிதேஷ். இம்பேக்ட் வீரராக அஷுதோஷ் சர்மா களம் கண்டார். அவருடன் இணைந்து ஷஷாங் சிங் இன்னிங்ஸில் அதிரடி காட்ட 43 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த அஷுதோஷ், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. வெற்றிக்கான ரன்களை 19.5 பந்துகளில் பஞ்சாப் அணி எட்டியது. ஷஷாங் சிங், 29 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.