சுப்மன் கில் ஒன் மேன் ஷோ: பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு @ ஐபிஎல் | Gujarat Titans scores 199 runs against Punjab Kings in ipl 2024
அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்தது. இதில் சுப்மன் கில் தனியாக நின்று 89 ரன்களைச் சேர்த்தார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் ஓப்பனர்களாக சுப்மன் கில், ரித்திமான் சாஹா களமிறங்கினர். பொறுமையாக தொடக்கம் கொடுத்த இந்த இணையை ரபாடா 3ஆவது ஓவரில் பிரித்தார். 11 ரன்களில் ரித்திமான் சாஹா அவுட்.
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் நிதானமான விளையாடி ரன்களைச் சேர்த்தார். அவரை ஹர்ப்ரீத் ப்ரார் 10வது ஓவரில் 26 ரன்களுக்கு விக்கெட்டாக்கினார். 10 ஓவர் முடிவில் குஜராத் 2 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களை சேர்த்திருந்தது.
சுப்மன் கில்லுடன் சாய் சுதர்சன் கைகோத்தார். ஆனால் அவரும் 33 ரன்களில் கிளம்பினார். அவரைத் தொடர்ந்து வந்த விஜய் சங்கரும் 8 ரன்களில் நிலைக்காமல் சென்றுவிட்டார்.
இதனிடையே கேப்டனாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனாக திகழ்ந்தார் கில். 4 சிக்சர்களை விளாசி, 48 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். நடப்பு தொடரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இதுவாகும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 199 ரன்களைச் சேர்த்தது. சுப்மன் கில் 89 ரன்களுடனும், ராகுல் தெவாட்டியா 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பஞ்சாப் அணி தரப்பில் ராபாடா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷத் படேல், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.