EBM News Tamil
Leading News Portal in Tamil

‘எங்கள் தூக்கத்தை கெடுத்துவிட்டார் விராட் கோலி’: ஆன்டர்ஸன் புலம்பல்

விராட் கோலி எங்களின் தூக்கத்தை கெடுத்துவிட்டார், அவரை ஆட்டமிழக்கச் செய்வது எப்படி என்றே சிந்திக்க வேண்டியது இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் தெரிவித்துள்ளார்.
பர்மிங்ஹாம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் நடந்து வருகிறது. முதலில் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களும், இந்திய அணி 274 ரன்களும் சேர்த்தனர். 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்து, முதல் இன்னிங்ஸில் 13 ரன்கள் முன்னிலையும் சேர்த்து 194 ரன்கள் இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயித்தது.
194 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களுடன் களத்தில் உள்ளது. விராட் கோலி, 43 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடன் உள்ளனர்.
இந்நிலையியல் கடந்த முதல் இன்னிங்ஸில் விராட் கோலியின் அபார சதத்தால், இந்திய அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 2-வது இன்னிங்ஸிலும் விராட் கோலி நிலைத்து ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என நம்பப்படுகிறது. இது இங்கிலாந்து அணியினருக்குக் கிலியை ஏற்படுத்தி இருக்கிறது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் நிற்கவைத்து இன் கட்டர், அவுட் ஸ்விங் மூலம் படம் காட்டிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் கோலியிடம் ஒன்றும் செய்ய முடியவில்லை. அனாசயமாக இங்கிலாந்தின் ஆன்டர்ஸன், ஸ்டோக்ஸ், பிராட், கரன் ஆகியோரின் பந்துவீச்சை சந்தித்து சதம் அடித்தார்.
இது குறித்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் நேற்று போட்டி முடிந்தபின் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உலக கிரிக்கெட்டில் யாரும் வெற்றிகொள்ள முடியாதவர்கள் இல்லை. அதுபோலத்தான் விராட் கோலியும். எங்களால் அவரை ஆட்டமிழக்கச் செய்ய முடியும். இந்த டெஸ்ட் போட்டியில் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னும் எங்களின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. ஆதலால், நாளைய(இன்று) போட்டியைத் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக எதிர்கொள்வோம்.
ஆனால், இன்று இரவு எங்களின் தூக்கத்தை விராட் கோலி கெடுத்துவிட்டார், விராட் கோலியை எப்படி ஆட்டமிழக்கச் செய்வது என்று இரவு படுக்கைக்கு போகும் வரை சிந்திக்க வேண்டியது இருக்கும். நாங்கள் இரவு நன்றாக தூங்கி ஓய்வு எடுத்துவிட்டு, காலையில் புத்துணர்ச்சியுடன் களத்துக்கு வருவோம். எங்களைப் பொருத்தவரை 30 ஓவர்களில் ஆட்டம் முடிந்துவிடும் என நினைக்கிறோம்.
ஆனால், விராட் கோலி முதல் இன்னிங்ஸில் டெய்ல் என்டர்களைப் பயன்படுத்தி பேட்டிங் செய்ததுபோல், 2-வது இன்னிங்ஸிலும் பேட் செய்தால், அவரை ஆட்டமிழக்கச் செய்வது கடினம். அப்படி நடந்தால் நிச்சயம் இந்திய அணி வென்றுவிடும்.
எங்களுக்கு வெற்றிக்குத் தேவை 5 விக்கெட்டுகள் மட்டுமே அதே விரைவாக எடுத்துவிட்டால் நாங்கள் தப்பித்தோம். இல்லாவிட்டால், அவர்கள் ரன் அடிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதே சமயம் கிரிக்கெட்டில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம், சிறிய ஸ்கோரை எட்டுவதற்குக்கூட சில சமயம், பெரிய பாட்னர்ஷிப் தேவைப்படும்.
இவ்வாறு ஆன்டர்ஸன் தெரிவித்தார்.