EBM News Tamil
Leading News Portal in Tamil

அந்த சதத்தை மறக்கமுடியாது; எனக்கு இந்த சதம் பெரிதாகத் தெரியவில்லை: மனம்திறந்த விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நான் நேற்று அடித்த சதம் எனக்குச் சிறப்பானது இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
பர்மிங்ஹாம் நகரில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதைத் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 274 ரன்களுக்கு விக்கெட்டுகள் அனைத்தையும் இழந்தது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒற்றை ஆளாக அணியை வழிநடத்திச் சிறப்பாக ஸ்கோரை எட்ட உதவினார். மிகச்சிறப்பாக பேட் செய்த விராட் கோலி, இங்கிலாந்து மண்ணில் தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்து 149 ரன்களில் ஆட்டமிழந்தார்.
போட்டிக்குப் பின் விராட் கோலி பிசிசிஐ சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
”என்னைப் பொறுத்தவரை எட்ஜ்பாஸ்டனில் நான் இப்போது அடித்த சதம் எனக்குச் சிறப்பானது எனக் கருதவில்லை. அப்படி சிறப்பானதா என்றும் எனக்குத் தெரியாது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கடந்த 2014-ம் ஆண்டு ஆடிலெய்டில் நான் அடித்த சதத்தை இன்னும் என்னால் மறக்க முடியாது.
அந்தச் சதம் எப்போதும் எனக்கு ஸ்பெஷல். அதை என்னால் மறக்க முடியாது. 2-வது இன்னிங்ஸில் 364 ரன்களை சேஸிங் செய்தபோது நான் அடித்த அந்தச் சதம் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக நான் இப்போது அடித்த சதம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், சிறப்பானதாக எண்ணவில்லை.
நான் சதம் அடித்ததை பெரிய விஷயமாகக் கருதவில்லை. நான் எப்படியும் இந்திய அணியைக் குறைந்தபட்சம் 15 ரன்கள் முன்னிலை பெற வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், அதற்குள் நான் ஆட்டமிழந்தது எனக்கு வேதனையளிக்கிறது. நாங்கள் இன்னும் சிறப்பாகப் பந்துவீசி இருக்க வேண்டும். நான் மனதளவிலும் உடலளவிலும் வீரராகத் தயாராகி வந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
என்னால் இந்தச் சதத்தை முழுமையாகக் கொண்டாடுவது கடினமாக இருக்கிறது. என்ன செய்து இதைக் கொண்டாட வேண்டும் என எனக்குள் நான் கேட்டுக்கொள்கிறேன். சவாலாக எடுத்துக்கொண்டு அணியை அடுத்த இன்னிங்ஸில் வழிநடத்திச் செல்ல வேண்டும்.
இந்த டெஸ்ட் போட்டி உடற்தகுதிக்கும், மனத்தகுதிக்கும் நடக்கும் சோதனையாகும். ஆனால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் நிர்ணயித்த ஸ்கோருக்கு அருகே வந்துவிட்டோம் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அணிக்காக நாம் உதவி செய்யும் போது எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதாகவே உணர்வோம்.
குறிப்பாகக் கடைசி வரிசையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, இசாந்த், உமேஷ் ஆகியோர் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக பேட் செய்தார்கள். அணியை நல்ல இலக்கை நோக்கிக் கொண்டு செல்ல எனக்கு ஆதரவு கொடுத்தார்கள்”.
இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.