EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்திய ஏ அணி அபாரம்; பிரித்வி, ஸ்ரேயாஸ், கிஷான் விளாசல்: இங்கிலாந்து ஏ சுருண்டது

பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷான் ஆகியோரின் காட்டடி பேட்டிங்கால், இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடந்த இங்கிலாந்து லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய ஏ அணி.
இம்மாதம் 2-ம் தேதி முதல் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இந்திய ஏ அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. இதற்காக இந்திய ஏ அணி பயிற்சியாளர் டிராவிட் தலைமையில் இங்கிலாந்து சென்றது. இதில் முதல் பயிற்சி ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது.
இந்திய ஏ அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட முக்கிய வீரர்களான இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் அய்யர், பிர்திவி ஷா, தீபக் சாஹர், குர்னல் பாண்டியா, மயங்க் அகர்வால், விஜய் சங்கர், அக்சர் படேல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளதால் வலிமையான அணியாகச் சென்றுள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து லெவன் அணி ஃபீல்டிங் செய்தது. முதலில் பேட் செய்த இந்திய லெவன் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் பிரித்வி ஷா 61 பந்துகளில் 71 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 45 பந்துகளில் 54 ரன்களும், இஷான் கிஷான் 46 பந்துகளில் 50 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 4 ரன்னில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த விஹாரி 38 ரன்களில் வெளியேறினார். பிரித்வி ஷா 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்ளிட்ட 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விஹாரி, ஷா கூட்டணி 84 ரன்கள் சேர்த்தனர்.
அதேபோல 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர், கிஷான் கூட்டணி 99 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்திய ஏ அணியில் சஞ்சு சாம்ஸன் இடம் பெற்றிருந்த நிலையில், அவருக்கு உடற்தகுதி இல்லாததால், அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் இடம் பெற்றார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை கிஷான் சரியாகப் பயன்படுத்தி அரை சதம் அடித்துள்ளார். இதில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடக்கம்.
குர்னல் பாண்டியா 38 ரன்கள் எடுத்தார். அக்ஸர் படேல் 28 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து லெவன் அணி தரப்பில் ஹிக்கின்ஸ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
329 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து லெவன் அணி, 36.5 ஓவர்களில் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.
இங்கிலாந்து அணியில் கிரிட்ச்லே அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணித் தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
இம்மாதம் 22-ம் தேதி தொடங்கும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடர் தவிர்த்து இந்திய ஏ அணி மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.