EBM News Tamil
Leading News Portal in Tamil

நெய்மரை 10 முறை ஃபவுல் செய்த சுவிட்சர்லாந்து அணி: சர்ச்சைக்குரிய கோலில் பிரேசிலுடன் டிரா

என்னாயிற்று தென் அமெரிக்காவின் பெரிய அணிகளுக்கு? மெக்சிகோ உலக சாம்பியனை வீழ்த்த, அர்ஜெண்டினா ஐஸ்லாந்துடன் ட்ரா செய்ய நேற்று சுவிட்சர்லாந்துடன் பிரேசில் 1-1 என்று ட்ரா செய்துள்ளது.
மின்னல் வேக ஆட்டத்தில் எதிரணியினரின் தடுப்பு வியூகத்தை முறியடிக்க நினைத்த போதெல்லாம் நெய்மரை நியாயமாக தடுக்க வழியின்றி ஒரு 10 முறையாவது நெய்மரை ஃபவுல் செய்திருப்பார்கள் சுவிஸ் வீரர்கள்.
பிரேசில் இப்படியாக இதனை நினைக்கவில்லை, இப்படியாகும் என்று ஆடவில்லை, ஆனால் அதுதான் நடந்தது.
பிலிப் கோட்டின்ஹோவின் 20வது நிமிட அற்புத கோலினால் 5 முறை உலகசாம்பியன் பிரேசில் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இடைவேளைக்கு முன்பாக நட்சத்திர வீரர் நெய்மர் பிரமாதமாக ஆடினார். தன்னை மார்க் செய்து தடுப்பவரை அடிக்கடி ஏமாற்றுவதற்காக தன் ஆட்டத்தை தந்திரமாக மெதுவாக்கி, அவரை திசைத்திருப்பினார்.
ஆனால் இடைவேளைக்குப் பிறகு ஆட்டத்தின் போக்குக்கு எதிராக சுவிஸ் வீரர் ஸ்டீவன் ஸ்யூபர் தலையால் முட்டி சமன் செய்ததை பிரேசிலினால் நம்ப முடியவில்லை. பிற்பாடு கடுமையாக சுவிஸ் அணிக்கு கோல் முனையில் நெருக்கடி கொடுத்தும் கோட்டைக் கடக்க முடியவில்லை இந்த நட்சத்திர அணியினால், இதன் விளைவு 1-1 ட்ரா.
ஸ்யூபரின் கோலை அனுமதிக்கக் கூடாது என்று பிரேசில் வாதிட்டது, காரணம் மிராண்டாவைத் தள்ளி விட்டார் என்று குற்றம்சாட்டினர், ஆனால் நடுவர் சீசர் ரேமோஸ் இதற்கெல்லா அசருபவராகத் தெரியவில்லை. அந்தத் தருணத்தில் நிலையெடுக்க சிறு போராட்டம் இருந்தது உண்மை. ஆனாலும் மிராண்டாவைத் தள்ளிவிடும் அளவுக்கான போராட்டம் இல்லை. மிராண்டா பந்தைத் தவறவிட்டார் என்றே கூற வேண்டும், சுவிஸ் வீரர் செர்தான் ஷாகிரியின் கார்னரை சரியாகக் கணிக்காமல் தான் மார்க் செய்ய வேண்டிய ஸ்யூபரை அவர் விட்டுவிட்டார். கொஞ்சம் பிரேசில் தரப்பில் தடுப்பாட்டம் சரியாக அவ்வமயத்தில் இல்லை என்பதே உண்மை.
செர்தான் ஷாகிரி ஒரு கார்னர் ஷாட்டை அழகாக உள்ளே செலுத்த அங்கு ஸ்யூபர், பிரேசில் தடுப்பு வீரர் மிராண்டாவைச் சமாளித்து தலையால் முட்டி அதிர்ச்சிச் சமன் கோலை அடித்தார். அவர் மிராண்டாவின் முதுகில் கைவைத்தார். வீடியோ ரெஃபர் செய்ய பிரேசில் வீரர்கள் வாதிட்டனர். ஆனால் மறுக்கப்பட்டு கோல் சுவிஸ் சார்பாக உறுதி செய்யப்பட்டது.
இந்தக் கோலுக்குப் பிறகே சுவிஸ் அணியின் உறுதிப்பாடு அதிகரித்தது, இறுதிக் கணங்களின் இந்த உறுதிப்பாடு பிரேசிலின் வெறித்தனமான கோல் முயற்சிகளைத் தடுத்தது. பிரேசில் ஏகப்பட்ட வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டது ஆனால் பந்து கோல்வலையைச் சந்திக்கவில்லை.
69வது நிமிடத்தில் கோட்டின்ஹோ ஒரு பந்தை வைடில் அடித்தார். முன்னதாக நெய்மரும் பதிலி வீரர் ரொபர்ட்டோ ஃபிர்மினோவும் நெருக்கமாக வந்தனர், ஆனால் கோலாகவில்லை. மிராண்டாவும் ஒரு பந்தை இலக்குக்கு வெளியே அடித்தார். இன்னொரு பதிலி வீரர் அகஸ்டோ நெருக்கமான இடத்திலிருந்து ஷாட்டை அடித்தார். ஆனால் ஃபேபியன் ஸ்கார் அதனை வெளியே தள்ளினார்.
74வது நிமிடத்தில் இன்னொரு சர்ச்சை எழுந்தது. பந்தை பாஸ் செய்யச் சென்ற போது பிரேஸில் வீரர் கேப்ரியல் ஜீஸஸைக் கைகளால் வளைத்து சுவிஸ் வீரர் மேனுவெல் அகாஞ்ஜி ஃபவுல் செய்தார் இதனால் கேப்ரியல் ஜீஸஸ் கீழே விழுந்தார் ஆனால் பெனால்டி முறையீடு நடுவரால் புறக்கணிக்கப்பட்டது. ஒருவேளை தென் அமெரிக்க அணிகளை இந்த உலகக்கோப்பையில் பெரிய அளவில் முன்னேற விடாமல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோ என்ற ஐயம் எழுகிறது. மேலும் கேப்ரியல் ஜீஸஸ் தான் கீழே விழும்போது அதனைக் கொஞ்சம் ஊதிப்பெருக்கியது நடுவர் மனதில் சந்தேகத்தைஏற்படுத்தியிருக்கலாம். அதனால் பெனால்டி மறுக்கப்பட்டிருக்கலாம்.
ஆட்டத்துக்கு முன்பாக பிரேசில் நட்சத்திரம் நெய்மர், ‘6வது உலகக்கோப்பையை வெல்லச் செல்வோம் பிரேசில்’என்று எழுதியிருந்தார். அப்படித்தான் தொடங்கினர் பிரேசில், நெய்மர் தன்னிடம் வந்த பந்தை மார்செலோவுக்கு தட்டி விட்டார். மார்செலோ கிராஸ் ஸ்யூபரால் ‘தலை’யிடப்பட்டது. ஆனால் கோர்ட்டின்ஹோ தன் வலது காலால் கோலுக்குள் செலுத்தினார். சுவிஸ் கோல் கீப்பர் தன் இடது புறம் முழு டைவ் அடித்தாலும் பயனில்லை. பிரேசில் 1-0.
நெய்மர் தன் போக்கில் ஆடினார். அதனால் சிலவேளைகளில் ரசிகர்கள் ஆரவாரம் எழுவதற்குக் காரணமான சில எழுச்சிகளை மேற்கொண்டார் நெய்மர். மின்னல் வேகத்தில் அவர் பாம்பு போல் பந்தை எடுத்துச் செல்லும்போதெல்லாம் சுவிஸ் வீரர்கள் அவரை ஃபவுல்தான் செய்ய முடிந்தது. புள்ளிவிவரங்களின் படி 10 முறை நெய்மரை ஃபவுல் செய்தனர் சுவிஸ் வீரர்கள். நல்ல வேளையாக நெய்மருக்கு காயம் ஏற்படுத்தும் நோக்கம் இல்லையென்றாலும் இதில் ஒரு அபத்த மகிழ்ச்சியை சுவிஸ் அணியினர் அடைந்ததுதான் அவலம். ஸ்டீபன் லிட்ச்ஸ்டெய்னர், ஸ்கார், பெஹ்ராமி ஆகிய சுவிஸ் வீரர்கள் நெய்மரை ஃபவுல் செய்ததற்காக புக் செய்யப்பட்டனர்.
இடைவேளையின் போது பிரேசில் முன்னிலையுடன் நெஞ்சு நிமிர்த்திச் சென்றது. நெய்மரின் கார்னரை தியாகோ சில்வா மேலே அடித்தார், முன்னதாக கேப்ரியல் ஜீஸஸ், சுவிஸ் வீரர் அகாஞ்சி ஒத்தைக்கு ஒத்தையில் கேப்ரியல் தோற்றார், கோலாக மாறவில்லை.
இடைவேளைக்குப் பிறகு 50வது நிமிடத்தில்தான் ஸ்டீவன் ஸ்யூபர் அந்தச் சர்ச்சைக்க்குரிய கோலை அடித்துச் சமன் செய்தார், சமன் செய்த சில நிமிடங்களில், அதாவது ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் கோர்ட்டின்ஹோவின் இரண்டு கோல் முயற்சிகளும் தடுக்கப்பட்டன. நெய்மரின் ஷாட் ஒன்று கடைசியில் பக்கவாட்டு வலையைப் போய் மோதியது. நெய்மர் லேசாக நொண்ட ஆரம்பித்தார். ஆனால் மீண்ட நெய்மர் மீண்டும் முன்னிலை வகிக்க பிரேசில் ஒன்று திரண்டு ஏகப்பட்ட முறை சுவிஸ் எல்லைக்குள் புகுந்த் குடைச்சல் கொடுத்தனர், ஆனால் கோல் வரவில்லை.
மொத்தம் 21 ஷாட்களை கோல் நோக்கி பிரேசில் அடிக்க சுவிஸ் அணி 6முறைதான் கோல் நோக்கி அடித்தனர். பிரேஸில்தான் வெற்றி பெற தகுதியான அணி, ஆட்டத்தின் அடிப்படையில் அப்படித்தான் கூற வேண்டும், ஆனால் இறுதியில் சுவிட்சர்லாந்து புள்ளிகள் பட்டியலில் வந்து விட்டது.