யோ யோ தேர்வில் தோல்வியடைந்த சஞ்சு சாம்சன்: இந்திய ஏ அணியிலிருந்து நீக்கம்?
இந்திய ஏ அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. இதையடுத்து, நேற்று தில்லியிலிருந்து ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஏ அணி இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றது. ஆனால், இந்த அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது ஆச்சர்யத்தை வரவழைத்துள்ளது. ஏனெனில் பிசிசிஐயால் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு அறிவிக்கப்பட்ட அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தார்.
இதன்பிறகுதான் இங்கிலாந்துக்கு சஞ்சு சாம்சன் செல்லாதது குறித்த தகவல் வெளியானது. இந்திய வீரர்களின் உடற்தகுதிக்காக நடத்தப்படும் யோ யோ தேர்வில் சஞ்சு சாம்சன் தேர்ச்சி பெறவில்லை. 16.1 புள்ளியை அவர் அடையாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய ஏ அணிகள் விளையாடவுள்ள முத்தரப்பு ஒருநாள் போட்டிக்கு சஞ்சு சாம்சன் தேர்வாகியிருந்தார். காயம் காரணமாகவும் முறையான பயிற்சியின்மை காரணமாகவும் யோ யோ தேர்வில் 23 வயது சஞ்சு சாம்சனால் தேர்ச்சி பெறமுடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தக் காரணத்தால் இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு பிசிசிஐயிடமிருந்து வெளிவரவில்லை.