EBM News Tamil
Leading News Portal in Tamil

உலக மசாலா: நம்பிக்கை மனிதர்

வாழ்க்கையில் தங்கள் லட்சியத்தை அடையப் போராடும்போது பலரும் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். ஆனால் கேப்ரியல் ஹெரிடியா, தன்னுடைய குறைபாட்டைப் பொருட்படுத்தாமல் லட்சியத்தை அடைவதில் வெற்றி கண்டிருக்கிறார்! அர்ஜென்டினாவைச் சேர்ந்த 20 வயது முடிதிருத்தும் கலைஞர், முழங்கைகளுக்கு மேல் இல்லாமல்தான் பிறந்தார். ஆனாலும் அதை ஒரு குறைபாடாக அவரை நினைக்க விடாமல், அவரது குடும்பம் அன்பாகப் பார்த்துக்கொண்டது. இதனால் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வளர்ந்தார். அக்கம்பக்கத்திலும் பள்ளியிலும் இவருக்கு நல்ல மனிதர்கள் நண்பர்களாக அமைந்தனர்.
ஒருநாள் கூட, குறைபாட்டைச் சுட்டிக் காட்டி, இவர் மனதை நோகடித்ததில்லை. இவரது தன்னம்பிக்கைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம், இவரது அம்மாதான். அவர் முடிதிருத்தும் கலைஞராக வேலை செய்துவந்தார். 14 வயதில் கேப்ரியலுக்கு முடிதிருத்தும் கலையில் ஆர்வம் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவிடம் நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். பொழுதுபோக்குக்காகக் கற்றுக்கொள்கிறார் என்று எல்லோரும் நினைத்தனர். பிறகு தன்னுடைய வேலையாக இதை மாற்றிக்கொண்டார்.
“முதலில் தண்ணீர் தம்ளரை எடுத்துக் குடிக்கப் பழகினேன். பிறகு ஒவ்வொரு வேலையையும் நானே செய்யக் கற்றுக்கொண்டேன். நன்றாகப் படித்தேன். வளர்ந்த பிறகு பைக் ஓட்டக் கற்றுக்கொண்டேன். பிறகு காரை ஓட்டினேன். விதவிதமாக முடிதிருத்த ஆரம்பித்த பிறகு, எனக்காக ஒரு கடையை வைத்துக் கொடுத்தனர். ஒன்றரை ஆண்டுகள் அதில் பணியாற்றினேன். பிறகு அர்ஜென்டினா முடிதிருத்தும் அசோசியேஷனிலிருந்து என்னைத் தொடர்புகொண்டனர். வறுமையில் வாடும் முடிதிருத்தும் கலைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கச் சொன்னார்கள். எல்லா வயது மனிதர்களுக்கும் நான் பயிற்சி அளித்தேன். அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்தேன். இந்தப் பணி எனக்கு மிகவும் மன நிறைவை அளித்தது. என்னை ‘பர்ஃபக்‌ஷனிஸ்ட்’ என்று சொல்வதை நான் விரும்புகிறேன். என் தோழி யானினாவின் உறவினர், வாடகை இல்லாமல் முடிதிருத்துவதற்கு ஓர் இடத்தைக் கொடுத்திருக்கிறார். ஆரம்பித்து ஒரு மாதம்தான் ஆகிறது. இங்கே முடிவெட்டுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். பலரும் என்னுடைய குறைபாட்டையும் மீறி, நான் எப்படி இவ்வளவு பெரிய ஆளாக மாறினேன் என்றும் எப்படி எப்போதும் உற்சாகமாக இருக்கிறேன் என்றும் கேட்கிறார்கள். மகிழ்ச்சிக்குக் காரணம், என் 11 மாதக் குழந்தைதான். ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் வேலைகளில் சின்ன முன்னேற்றமாவது இருக்குமாறு பார்த்துக்கொண்டால், நம் முன்னேற்றத்தை யாரும் தடுத்துவிட முடியாது” என்கிறார் கேப்ரியல். பிறரிடம் எந்த உதவி
யும் எதிர்பார்க்காமல் முடிதிருத்துவதையும், தலையில் நுட்பமான டிசைன்களை வரைவதையும் காணும் இளைஞர்கள், இவரைத் தங்கள் ரோல்மாடலாக நினைக்கிறார்கள். பல்வேறு போட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார் கேப்ரியல்.
நம்பிக்கை மனிதர்