EBM News Tamil
Leading News Portal in Tamil

விற்காத பணியாரம்… ஊரடங்கில் துரத்தும் வறுமை…! ஓடும் ‛ஒன்றரை அடி’ இளைஞர்

ஊரடங்கு பலரது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ள நிலையில் வாழ்வாதாரத்தை இழந்த நிலையிலும் குடும்ப பாரத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார் ‘பணியாரம்’ தினேஷ்.

‘பணியாரம்’ தினேஷ் ஒன்றரை அடி சிறுவனல்ல; பி.பி.ஏ., மூன்றாம் ஆண்டு நிறைவு செய்யவுள்ள 21 வயது தினேஷ்குமார். தகடு வீடு, நுழைந்ததும் முடியும் அறை, விரல் விட்டு எண்ணும் பாத்திரங்கள், கிழிந்து தொங்கும் டவுசர்; இது தான் தினேஷின் ஏழ்மையை விளக்கும் அடையாளங்கள். 2அடி கூட உயரமில்லாத இந்த இளைஞர் சுமக்கும் பாரத்தை பார்த்தாலே நம் நெஞ்சில் கனம் கூடும்.

மதுரை மாவட்டம் மேலக்கால் கிராமத்தில் பணியார தினேஷ் என்றால் அனைவருக்கும் தெரியும். அப்பா அழகர்சாமி விடாக்குடியால் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து போக மூத்த மகனாக வீட்டின் பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயம். ஆதரவின்றி நின்ற அம்மா, அடைக்கலம் தர வேண்டிய இரு தங்கைகள் என 11 வயதிலிருந்து உழைத்துக் கொண்டிருக்கிறார் தினேஷ்.

விவசாய கூலியான தாய் முத்துமாரி பகலில் வேலை முடித்து மாலை வந்து பணியாரம் சுடுவதும்; சுடப்பட்ட பணியாரங்களை எடுத்துச் சென்று தினேஷ் விற்பதும் இவர்களின் அன்றாட பணி. பள்ளி, கல்லூரியை தினேஷ் கடந்ததும், மற்றொரு சகோதரி பிளஸ் 2 படிப்பதும் இந்த வருவாயில் தான். மாற்றுத்திறனாளி உதவித்தொகையாக தனக்கு மாதம் கிடைக்கும் 2500 ரூபாயும், விதவை உதவித்தொகையாக தன் தாய்க்கு மாதம் கிடைக்கும் 1000 ரூபாயும், தினமும் பணியாரம் விற்கு கிடைக்கும் 100 ரூபாய் தான் தினேஷ் குடும்பத்தின் நிரந்தர வருவாய்.

சேமிப்பு இல்லை என்றாலும் அன்றாட பிழைப்புக்கு பிரச்னை இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்த இவர்களது வாழ்க்கைக்கு இடியாய் வந்திறங்கியது ஊரடங்கு. விவசாய பணிகள் இல்லாததால் தாய் முத்துமாரி வழியாக வந்த வருவாய் முற்றிலும் நின்று போனது. கொரனாவை காரணம் காட்டி பணியாரம் சாப்பிடுவதை ஊர் மக்களும் தவிர்த்தனர். அரசு உதவித் தொகை 2500 ரூபாயை வைத்து ஒவ்வொரு நாளையும் ஒரு யுகமாக கடத்திக் கொண்டிருக்கிறது தினேஷ் குடும்பம்.

இறுதி ஆண்டு தேர்வை முடித்து பட்டதாரியாக அரசு பணியை பெறலாம் என நினைத்தவருக்கு தேர்வு ரத்தானது. நடனம் மீது தனக்கு இருக்கும் மோகத்தை வைத்து யூடியூப் சேனல் தொடங்கலாம் என எதிர்பார்த்து அதற்கான பணியில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்த போது வெளியேற முடியாத சூழலில் அதுவும் முடங்கியது. விற்கிறதோ இல்லையோ இருக்கும் அரிசியை இடித்து பணியாரங்கள் சுட்டு, நம்பிக்கையோடு தெருவுக்கு போகிறார் தினேஷ்.ஆனால் ஆளில்லாத தெருவில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. விற்பனையாகாத பணியாரங்களை அங்குள்ள குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு கிடைக்கும் ஐந்து, பத்து பணத்தோடு வீடு திரும்பும் தினேஷ், தனது குடும்பத்தாருடன் மூன்று வேளை உணவு உண்ணும் நாளுக்காக காத்திருக்கிறார்.