EBM News Tamil
Leading News Portal in Tamil

2028-ல் போலவரம் அணை கட்டும் பணி நிறைவடையும்: ஆந்திர அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் | Polavaram dam to be completed by 2028 ap govt


அமராவதி: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம்ஆந்திரா, தெலங்கானா என பிரிவினை செய்யப்பட்ட பின்னர், புதிய ஆந்திர மாநிலத்தில் கோதாவரிநதிகளுக்கிடையே போலவரம் என்ற பெயரில் பிரம்மாண்டமான அணை கட்ட சந்திரபாபு நாயுடு அரசு 2014-ல் முடிவு செய்தது.

இதற்கு மாநில பிரிவினை சட்டத்தின் கீழ் மத்திய அரசு சிறப்பு நிதியை ஒதுக்கியது. அதன்படி 2014 முதல் 2019 வரை சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது 72 சதவீத பணிகள் முடிவடைந்திருந்தன. இந்நிலையில், 2019-ல் ஜெகன் முதல்வர் ஆனார். ஆனால், அவர் இத்திட்டம் மீது நாட்டம் காட்ட வில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு நேற்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போலவரம் அணைக்கட்டுக்கு என்னுடைய 2014-19 ஆட்சி காலத்தில் ரூ.11,762.47 கோடி செலவிடப்பட்டது. அப்போது 72 சதவீதம் பணிகள் நிறைவடைந்தன. இதில் மத்திய அரசு ரூ. 6,764.16 கோடி பணத்தை மாநில அரசுக்கு வழங்கியது. மீதமுள்ள ரூ.4,998.31 கோடி 2019 ஆண்டில் வழங்க வேண்டி இருந்தது. அதன் பிறகு ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி வந்தது.

அப்போது மத்திய அரசு மீதம் வைத்திருந்த ரூ.4,998.31 கோடியையும் வழங்கியது. இந்நிலையில், 1.6.2019 முதல் 31.5.2024 வரை ஜெகன் அரசுக்கு மத்திய அரசு போலவரம் நிதியின் கீழ் ரூ.8,382.11 கோடியை வழங்கியுள்ளது.

ஆனால், இதில் ஜெகன் அரசு வெறும், ரூ.4,996.53 கோடியை மட்டுமே செலவு செய்து, ரூ.3,385.58 கோடியை மாநில அரசின் வேறு சில திட்டங்களுக்கு மாற்றி உபயோகித்து கொண்டது. இதனால் போலவரம் அணையின் பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டன. இன்றைய நிலவரப்படி ரூ.2,697 கோடி காண்டிராக்ட் பில்கள் வழங்கப்படாமலேயே உள்ளன.

இதனால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டன. ஜெகன் ஆட்சியில் வெறும் 3.84 சதவீத சிவில் பணிகள் மட்டுமே நடந்துள்ளன. போலவரம் அணையை என்னுடைய ஆட்சியில் 45.72 அடி உயரத்தில் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது. இதனை ஜெகன்அரசு 41.15 அடியாக குறைத்துள்ளது. போலவரம் அணையின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்ய ரூ. 30,436.95 கோடி செலவாகும் என ஆர்சிசி கமிட்டி (ரிவைஸ்ட் காஸ்ட் கமிட்டி)மதிப்பிட்டுள்ளது. தற்போது அமெரிக்கா, கனடா நிபுணர் குழு இங்கேயே தங்கி அணைக்கட்டின் பணிகளை பூர்த்தி செய்ய உள்ளது.

அப்படி இந்த அணையின் பணிகள் நிறைவடைந்தால், இதன்கொள்ளளவு 114.43 கன அடியாக இருக்கும். 2028 ஜூன் மாதம் இந்த அணையின் பணிகள் நிறைவடையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.