EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 14% ஆக உயர்வு – சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ள நிலையில், இவர்களில் 14 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 553 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 36 பேர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கோவா கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக உருவெடுத்துள்ளதாகவும், கடந்த 14 நாட்களில் புதிதாக ஒரு தொற்று கூட ஏற்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊரடங்குக்கு முன்பு 3 .4 நாட்களுக்கு ஒருமுறை பாதிப்பு இரட்டிப்பாகி வந்த நிலையில், தற்போது இரட்டிப்பாகும் விகிதம் 7.5 நாட்களாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் பாதிப்பு இரட்டிப்பாகும் விகிதம் 14 நாட்களாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏப்ரல் 19 ஆம் தேதி கணக்கின்படி தேசிய சராசரியை விட, 18 மாநிலங்களில் பாதிப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊடகத்துறையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எதிர்பாராதது என்றும், ஊடகத்துறையில் பணியாற்றுவோர் உரிய முன்னெச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் லாவ் அகர்வால் வேண்டுகோள் விடுத்தார். இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்படும் 100 பேரில் 80 பேர், எந்த அறிகுறிகளும் இல்லாமலோ அல்லது லேசான அறிகுறிகளுடன் மட்டுமோ உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் கூறியுள்ளது.