EBM News Tamil
Leading News Portal in Tamil

ஓராண்டுக்கு பிரதமர் உள்பட அனைத்து எம்.பி.க்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் – அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக்கூட்டம் இன்று நடந்தது. காணொளி காட்சி மூலமாக அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பல முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கால் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை சீர் செய்ய அரசுக்கு நிதி தேவைப்படுகிறது. இதனால், அரசின் செலவினங்களை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அனைத்து எம்.பி.க்களின் மாத ஊதியத்தில் 30 சதவிகிதத்தை ஓராண்டுக்கு பிடித்தம் செய்ய அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும், கொரோனா நிவாரணத்திற்காக செலவிடப்படும். இதற்கான சட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இரண்டு ஆண்டுகளை கணக்கிட்டால் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியாக ரூ.7900 கோடி ஒதுக்கப்படும். இந்த தொகை நிறுத்தப்படுகிறது.

அமைச்சரவை முடிவுகளை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத்தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் ஓராண்டுக்கு தங்களது ஊதியத்தில் 30 சதவிகிதம் பிடித்தம் செய்ய தாமாக முன்வந்து சம்மதம் தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.